கம்பளை – அம்புலுவாவ மலையின் சில சரிவுகளில் நிலச்சரிவு ஏற்படும் அதிக அபாயம் காணப்படுவதால், அங்கு வசிக்கும் 18 வீடுகளின் குடியிருப்பாளர்களை உடனடியாக வெளியேறுமாறு கட்டட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) அறிவித்துள்ளது.
அம்புலுவாவ உயிர் பல்வகைத் தொகுதி வளாகத்தின் நுழைவாயிலுக்கு அருகாமையில் நிலத்தில் காணப்பட்ட பிளவுகளை ஆய்வு செய்த கண்காணிப்பு குழு, அந்தப் பகுதியில் 7 வீடுகள் அதிக அபாயப் பகுதியிலும், 6 வீடுகள் மிதமான அபாயப் பகுதியிலும் இருப்பதாகக் கண்டறிந்துள்ளது.
அதேவேளை, அம்புலுவாவ மலையின் மற்றொரு சரிவான வத்தேகடே பகுதியில் மேலும் பல பிளவுகள் அவதானிக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக அங்குள்ள 11 வீடுகள் மற்றும் கட்டடங்கள் அதிக அபாய வலயத்தில் இருப்பதாகவும், 12 வீடுகள் மிதமான அபாய வலயத்தில் இருப்பதாகவும் கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.
இந்த அதிக அபாய நிலப்பகுதிகளை எவ்வித கட்டுமானங்களும் அல்லது அபிவிருத்தி நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாத ‘அதி உணர்திறன் கொண்ட பாதுகாப்புப் பகுதிகளாக’ அறிவித்து பாதுகாக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
தற்போது நிலவும் மழைக்கால சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு பொதுமக்கள் அதிக அவதானத்துடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, மிதமான அபாயப் பகுதிகளில் வசிப்பவர்கள், முன்கூட்டிய எச்சரிக்கைகள் விடுக்கப்படும் போதோ அல்லது மழைவீழ்ச்சி குறிப்பிட்ட அளவை மீறும் போதோ உடனடியாக அவ்விடங்களிலிருந்து வெளியேற வேண்டும் என கட்டட ஆராய்ச்சி நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.
