அரசியல்உள்நாடு

அம்சிகா மரணம் – நீதி நிலை நாட்ட பட வேண்டும் – மனோ கணேசன் எம்.பி

தலைநகர தமிழர்களின் கல்வி கட்டமைப்பு சிதைவதற்கு, சிறுமி அம்சிகாவின் அகால மரணம் காரணமாக அமைந்து விட கூடாது.

நீதி நிலை நாட்ட பட வேண்டும்.

சுயாதீன விசாரணை நடத்த பட வேண்டும்.

உண்மை வெளியே வர வேண்டும். ஆனால், கற்றலையும், கற்பித்தலையும் குறிக்கும் கல்வி என்ற கட்டமைப்பின் ஏணிகளான எங்கள் ஒட்டு மொத்த நல்லாசிரியர் சமுதாயத்தை, அவமானம், அதிருப்தி, அதைரியம், விரக்தி ஆகிய உணர்வலைகளுக்குள் ஒருபோதும் தள்ளி விட கூடாது என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிடுகையில் “ட்யூடரிகள்” என்ற தனியார் வகுப்புகள் வேறு, எமது தேசிய, மாகாண பாடசாலைகள் என்பன வேறு, என்பதையும் நாம் மனதில் கொள்ள வேண்டும்.

ஆகவே, சமூக அழுத்தங்களை தரும் போராட்டங்களும், சமூக ஊடகங்களும் “நீதியை கோர” வேண்டுமே தவிர, வரம்பு மீறி, எமது ஆசிரியர் சமூகத்தை நேரடியாகவோ, மறைமுகமாகவோ அவமான படுத்தி விட முனைய கூடாது.

கொழும்பு பம்பலபிட்டி இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியின் அதிபர், நடந்த சம்பவம் பற்றிய தனது அறிக்கையை, மாதங்களுக்கு முன்பே உரிய வேளையில் கல்வி அமைச்சிடம் சமர்பித்து விட்டார் என்றும், குறிப்பிட்ட அறிக்கை அடங்கிய கோப்பை பரிசீலித்து நடவடிக்கைகளை எடுக்க கல்வி அமைச்சு அதிகாரிகள் தவறி விட்டார்கள் என்றும் இப்போது அறிகிறேன்.

அப்போதே கல்வி அமைச்சு மட்டத்தில் நடவடிக்கை எடுத்திருந்தால் விவகாரம் இந்தளவு தூரம் வந்து இருக்காது. இது எதுவும் அறியாமல் கல்வி அமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரிய அடுத்த நாள் நாடாளுமன்றத்துக்கு வந்து அறிக்கை கோருகிறார்.

மேலும், சம்பவம் கைமீறி போய் மக்கள் தெருவுக்கு வந்த பின்னர், நானும் இதை பாராளுமன்றத்தில் பிரஸ்தாபித்த பின்னர், “இடமாற்றம்” என்றும், “கட்டாய விடுமுறை” என்றும் அவரது அமைச்சு அவசர அவசரமாக தடுமாறியமை காலம் கடந்த செயல்கள்.

சமூகத்தில் இன்று நான் ஏதாவது ஒரு இடத்தில் இருக்கின்றேன் என்றால் அதன் பின்னால் எனக்கு கற்று தந்த நூற்றுக்கணக்கான நல்லாசிரியர்கள் இருக்கின்றார்கள்.

அவர்கள் எனக்கு கல்வியை மட்டும் கற்று தரவில்லை. பண்பாடு, நாகரீகம் உள்ளிட்ட நற்பண்பு கலாச்சாரத்தையும் கற்று தந்தார்கள். “கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்கு தக” என்றும் மிக தெளிவாக திருக்குறள் பொய்யாமொழியை என் மனதில் ஆழமாக பதித்து சென்றார்கள்.

சிறுமி அம்சிகா விவாகரத்தை முதன் முதல் பாராளுமன்றத்தில், விசேட தேசிய பிரச்சினையாக நான் முன் வைத்த போது, நான் எவரது பெயர்களையும் குறிப்பிடவில்லை. பாடசாலைகளின் பெயர்களை கூட குறிப்படவில்லை.

தேசிய சிறுவர் பாதுகாப்பு ஆணைக்குழு உட்பட அரசின் அசமந்த போக்கை சுட்டி காட்டி, நியாயத்தை கோரி மட்டுமே பேசினேன். பெண்கள், சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ் எனக்கு தந்த பொறுப்பற்ற பதில்களை கண்டித்து மட்டுமே பேசினேன்.

அரசியல் இலாபம் பெறவும் நான் இந்த விவகாரத்தை பயன்படுத்தி பேசவில்லை. அரசியல் ஆதாயம் தேவை என்றால், அகால மரண சம்பவம் நடந்த 29ம் திகதிக்கு, அடுத்த நாளே விசேட ஊடகவியலாளர் மாநாட்டை நடத்தி, ஆளும் கட்சியின் வடகொழும்பு அமைப்பாளர் மீது அரசியல் குற்றசாட்டுகளை முன் வைத்து, நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் வாக்கு வேட்டை நடத்தி இருக்கலாம்.

அதை நான் செய்யவில்லை. அப்படியான வாக்குகள் எனக்கு தேவையும் இல்லை. “இது அரசியல் அல்ல, நீதி கோரல்”, என நான் இதைபாராளுமன்றத்தில் சொன்ன போது, தேசிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட அமைச்சர்களான எனது நண்பர்கள் சிலர் என்னிடம் தனிப்பட்ட முறையில் உடன்பட்டார்கள்.

எனக்கு கல்வியும், நற்பண்பு கலாச்சாரத்தையும் கற்று தந்த நல்லாசிரியர்களின் அன்றைய வழிகாட்டல்கள் காரணமாகவே நான் பொது வெளியிலும், பாராளுமன்றத்திலும் கண்ணியமாக நடந்து கொள்கிறேன்.

ஆகவே எக்காரணம் கொண்டும் நமது நல்லாசிரியர்கள் மனம் தளர்ந்து, விரக்தி அடையும் விதத்தில் சிறுமி அம்சிகாகாவுக்கு நீதி கோரும் போராட்டத்தை, சமூகமும், சமூக ஊடகங்களும் கொண்டு செல்ல கூடாது என மிக உறுதியுடன் கூறுகிறேன்.

தலைநகர தமிழர்களின் தேசிய பாடசாலைகள், மாகாணசபை பாடசாலைகள் அடங்கிய தமிழர் கல்வி கட்டமைப்பு சிதைந்து விட்டால், நமது ஒட்டு மொத்த மாணவர் சமூகமே மிகபெரும் பாதிப்புகளை அடையும்.

அதற்கு இடம் கொடுத்து விட கூடாது என்ற பேருண்மையை நாம் மனதில் கொள்ள வேண்டும் என்றும் கோருகிறேன் என்றார்.

நேற்று மட்டக்குளியில் நிகழ்ந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

இந்த அரசாங்கம் இலங்கை வரலாற்றில் மிக பெரும் பலத்துடன் ஆட்சிக்கு வந்தது. ஆனாலும், ஆறே மாதத்துக்குள், பொருளாதார துறையில் திக்கு முக்காடி நிற்கிறது. “அரசாங்க செலவை குறைக்கிறோம், உழலை ஒழிக்கிறோம், ஊழல் செய்தவர்களை வழக்கு போட்டு சிறையில் அடைக்கிறோம்” என்ற நண்பர் அனுரவின் அரசு சொல்வதை நான் நூற்றுக்கு நூறு வரவேற்கிறேன். இவை எனது கொள்கைகளும் தான்.

ஆனால், இதை மட்டும் சொல்லி, சொல்லி, நாட்டை நடத்த முடியாது. நாள்தோறும் பொய்களை மாத்திரம் சொல்லி அரசாங்கத்தை நடத்த முடியாது.

நாட்டின் முதல் முக்கியத்துவம் பொருளாதாரத்துக்கு வழங்கபட்டே ஆகவேண்டும். ஆனால், அதை செய்ய அனுர அரசுக்கு தூர நோக்கு இல்லை.

ஏற்றுமதியில் வீழ்ச்சி, வெளிநாட்டு மூலதனம் அறவே இன்மை, வேலை இழப்பு, பண புழக்கம் குறைவு என்பவற்றை தவிர்க்க இந்திய பொருளாரத்துடன் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்தி விசேட வர்த்தக சலுகைகளை கோரி பெற்று முன்னேறுவோம் என்றால், அவை அரசாங்க செவிகளில் ஏறவில்லை.

2024ம் வருடம் 5 விகிதமாக இருந்த பொருளாதார வளர்ச்சி, 2025ம் வருடத்தில் 3.5 விகிதமாக குறையலாம் என உலக வங்கி ஆரூடம் கூறியுள்ளது. ஜனாதிபதி ட்ரம்பின் வரி கொள்கை நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது.

ஏற்கனவே இந்தியாவில் இருந்து இலங்கைக்கு முதலீடுகள் வருவது நின்று போய், இன்று கணிசமான இலங்கை ஆடை உற்பத்தியாளர்கள் தங்கள் தொழிலகங்களை இந்தியாவை நோக்கி கொண்டு செல்லும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

ஆகவே, இவை எல்லாம் சேர்ந்து, அடுத்த வருட முதல் காலாண்டில், பொருளாதார நெருக்கடிக்கான வாய்ப்புகள் மிக அதிகம்.

இந்நிலையில், இன்று நாம் இடம்பெறும் அரசியல் கூட்டணியை மேலும் விரிவு படுத்தி ஊழல் இல்லாத, ஆனால், “அனுபவம், ஆற்றல்” கொண்ட மிகப்பெரிய அரசியல் கூட்டணியை கட்டி எழுப்பும் முயற்சிகளை நாம் ஏற்கனவே ஆரம்பித்து விட்டோம். மக்கள் ஆணையுடன் வந்துள்ள அரசாங்கத்தை வீழ்த்தும் நோக்கம் எமக்கு கிஞ்சித்தும் கிடையாது. ஆனால், எமக்கான தேசிய பொறுப்புகளை நாம் நிறைவேற்ற தயங்க மாட்டோம்.

கொழும்பில் நாம் பலமாக இருக்க வேண்டும். இந்த தேர்தலில், கொழும்பு மாநகர சபை – தெகிவளை மாநகர சபை ஆகிய உள்ளூராட்சி சபைகளின் அனைத்து வட்டாரங்களிலும் தொலைபேசி சின்னத்துக்கு வாக்களியுங்கள்.

பாராளுமன்ற தேர்தலின் போது, வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் இருந்தமையை தவிர்த்து, முகம் தெரியாத நபர்களுக்கு வாக்களித்தமையையும் நிவர்த்தி செய்து, இந்த தேர்தலில் அணிதிரண்டு வாக்களியுங்கள்.

இந்த முறை வாக்கு சீட்டில் விருப்பு வாக்கு இலக்கங்கள் இல்லை. வேட்பாளர் பெயர்கள் இல்லை.

கட்சி சின்னங்கள் மாத்திரமே இருக்கும். ஆகவே சின்னங்களுக்கு மட்டுமே வாக்களிக்க வேண்டும் என்பதை மனதில் கொள்ளுங்கள் என்றார்.

Related posts

ஷிராந்தி ராஜபக்ஸவின் சகோதரர் நிஷாந்த விக்ரமசிங்கவுக்கு விளக்கமறியல்

editor

SLPP கட்சி உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய தடை!

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவிப்பிரமாணம் [முழுவிபரம்]