அரசியல்உள்நாடு

அமைச்சர் வசந்த சமரசிங்க என்னை விட செல்வந்தராக உள்ளார் – நாமல் ராஜபக்ஷ எம்.பி

சொத்து விடயத்தில் எதையும் மறைக்கவில்லை.சகல ஆவணங்களையும் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பித்துள்ளேன்.

சொத்து மற்றும் பொறுப்புக்கள் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட விபரங்களுக்கு மேலதிகமாக என்னிடம் சொத்துக்கள் ஏதும் காணப்படுமாயின் அவற்றை அரசுடமையாக்கி மக்களுக்கு பகிர்ந்தளிக்குமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறேன்.

எனது சொத்துக்கள் தொடர்பில் கேள்வியெழுப்பிய அமைச்சர் வசந்த சமரசிங்க இன்று என்னை விட செல்வந்தராக உள்ளார் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் வியாழக்கிழமை (18) நடைபெற்ற தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

எமது சொத்துக்கள் தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணி,ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி ஆகிய அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து ஆராய்ந்தன.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் தலைமையில் ஊழல் ஒழிப்பு குழு நியமிக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.விசாரணைகளுக்கு நாங்களும் முன்னிலையாகியிருந்தோம்.

சொத்துக்கள் தொடர்பில் நாங்கள் எதனையும் மறைக்கவில்லை.

கிராமத்துக்கு சென்று மக்களிடம் நிதி பெற்று நாங்கள் அரசியல் செய்யவில்லை. கப்பம் பெற்றும், பொய்யுரைத்தும் அரசியல் செய்யவில்லை.

2010 ஆம் ஆண்டு முதல் இன்றுவரை உரிய நேரத்தில் சொத்து மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான விபரங்களை ஆணைக்குழுவுக்கு சமர்ப்பித்துள்ளேன்.

எனது மனைவியின் சொத்துக்களுடன் என்னை தொடர்புப்படுத்தி ஒருதரப்பினர் தற்போது குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.

சொத்து விபரங்களை கடந்த காலங்களில் மறைத்து வைத்தவர்கள் தான் இன்று கலக்கமடைந்துள்ளார்கள்.

பிறர் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள்.

சொத்து மற்றும் பொறுப்புக்கள் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட விபரங்களுக்கு மேலதிகமாக என்னிடம் சொத்துக்கள் ஏதும் காணப்படுமாயின் அவற்றை அரசுடமையாக்கி மக்களுக்கு பகிர்ந்தளிக்குமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறேன்.

எனது சொத்துக்கள் தொடர்பில் கேள்வியெழுப்பிய அமைச்சர் வசந்த சமரசிங்க என்னை விட செல்வந்தராக உள்ளார்.

ஏழ்மை நிலையில் உள்ளோம், அணியும் ஆடைகள் கூட பிறர் வழங்குவதாக குறிப்பிட்டவர்களின் சொத்து மதிப்பு பல கோடிகளாக உள்ளது. நாட்டு மக்கள் இனியேனும் உண்மையை விளங்கிக்கொள்ள வேண்டும் என்றார்.

-இராஜதுரை ஹஷான்

Related posts

ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்கும் மனுவை தள்ளுபடி செய்யக் கோரி இடைக்கால மனு தாக்கல்

இதுவரையில் 2,816 பேர் பூரண குணம்

பெப்ரவரி முதல் சொகுசு பேருந்துகள் சேவையில்