வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி மீது இலஞ்சம் அல்லது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் எவ்வித குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்படவில்லை.
எவ்வாறிருப்பினும் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் பட்சத்தில் அதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் செவ்வாய்கிழமை (19) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இலஞ்சம் அல்லது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் இது தொடர்பில் எதுவும் கூறப்படவில்லை. ஆனால் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குமார ஜயக்கொடி அமைச்சுப் பொறுப்பினை ஏற்ற பின்னர் இடம்பெற்ற எந்தவொரு சம்பவத்தையும் குறிப்பிட்டு இந்த செய்தி வெளியிடப்படவில்லை.
2005 முதல் 2015 வரை அரச உத்தியோகத்தராக பணியாற்றிய நிறுவனத்தில் அவருக்கு கீழ் பணியாற்றிய சிலரால் முன்னெடுக்கப்பட்டதாகக் கூறப்படும் செயற்பாடுகள் தொடர்பிலேயே குறித்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கும். தேவையேற்பட்டால் அவ்வாணைக்குழுவால் வழக்கு தாக்கல் செய்யவும் முடியும்.
எமது அரசாங்கத்தில் அமைச்சுப் பதவியை வகிக்கும் எந்தவொரு அமைச்சருக்கு எதிராகவும் அமைச்சுப்பதவியை ஏற்க முன்னர் இடம்பெற்ற எந்தவொரு சம்பவம் தொடர்பிலும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுமாயின் அவை தொடர்பான விசாரணைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும்.
இதுவே எமது அரசாங்கத்தின் கொள்கையாகும். இவ்வாறான நடவடிக்கைகள் ஊடாகவே அரசாங்கத்தின் வெளிப்படை தன்மை வெளிப்படும்.
எனவே விசாரணைகளுக்கமைய அமைச்சரின் பக்கத்திலுள்ள நியாயத்தை கூறி, அவர் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க முடியும் என்றார்.
-எம்.மனோசித்ரா