அரசியல்உள்நாடு

அமைச்சர் உபாலி பன்னிலகேவுக்கு எதிரான மனுவின் விசாரணை திகதி அறிவிப்பு

கிராமிய அபிவிருத்தி அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகேவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ரத்து செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் பெப்ரவரி 27 ஆம் திகதி பரிசீலிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த மனுவை அபிநவ நிவஹல் பெரமுனவின் தலைவர் ஓஷல ஹேரத் தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு இன்று (29) மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதியரசர் ரோஹந்த அபேசூரிய மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் மற்றும் பிரதிவாதியின் சட்டத்தரணிகள் முன்வைத்த சமர்ப்பணங்களை பரிசீலித்த நீதியரசர்கள் அமர்வு, அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி தொடர்புடைய மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிட்டது.

கடந்த பொதுத் தேர்தலுக்குப் பின்னர் கலாநிதி உபாலி பன்னிலகே தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டதாக மனுதாரர் கூறுகிறார்.

இந்த நியமனம் வழங்கப்பட்ட நேரத்தில் உபாலி பன்னிலகே ருஹுணு பல்கலைக்கழகத்தில் சமூகவியல் பேராசிரியராகப் பணியாற்றி வந்ததாக தகவல் கிடைத்துள்ளதாகவும் மனுதாரர் தமது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தேர்தல் சட்டத்திற்கு முரணானது என்பதால், உபாலி பன்னிலகே பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க தகுதியற்றவர் என அறிவித்து அவரது பதவியை செல்லுபடியற்றதாக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு மனுதாரர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் கோரியுள்ளார்.

Related posts

மான்கள் தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் எம்.பி அருண பனாகொட வெளியிட்ட தகவல்

editor

மண்ணெண்ணெய்’காக வரிசையில் காத்திருப்பதைத் தவிர்க்கவும்

கடந்த 24 மணித்தியாலங்களில் 448 பேர் கைது