உலகம்

அமெரிக்காவின் 47 வது அதிபராக டிரம்ப் நாளை பதவியேற்பு

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டிரம்ப் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் தோல்வி அடைந்தார்.

அமெரிக்காவின் 47-வது அதிபராக டிரம்ப் நாளை பதவியேற்கிறார். தலைநகர் வாஷிங்டனில் உள்ள பாராளுமன்ற கட்டிடத்தில் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. வழக்கமாக அதிபர் பதவியேற்பு விழா பாராளுமன்றம் முன்பு நடைபெறும்.

ஆனால் கடுமையான குளிர் நிலவுவதால் பாராளுமன்ற கட்டிடத்திற்கு உள்ளே ரோடுண்டா என்ற பகுதியில் விழா நடைபெறுகிறது.

இதற்கிடையே டிரம்ப், புளோரிடாவின் பாம் பீச்சிலிருந்து வாஷிங்டனுக்கு தனி விமானத்தில் தனது மனைவி, மகனுடன் புறப்பட்டு நேற்று நள்ளிரவு சென்றடைந்தார்.

அவர் அமெரிக்காவின் 47.வது அதிபராக பதவியேற்க உள்ளதை குறிக்கும் வகையில், விமானத்தில் ஸ்பெஷல் மிஷன் 47 என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

பதவியேற்பு விழாவின் கருப்பொருள் “நமது நீடித்த ஜனநாயகம் ஒரு அரசியலமைப்பு வாக்குறுதி” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதவியேற்பு விழாவிற்கு முன்னதாக பதவியில் இருந்து வெளியேறும் அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோர் வெள்ளை மாளிகையில் டிரம்ப் மற்றும் மெலனியா டிரம்ப் ஆகியோருடன் தேநீர் அருந்துவார்கள்.

அதைத் தொடர்ந்து, பதவியேற்பு விழாவிற்காக டிரம்ப் பாராளுமன்ற கட்டிடத்திற்குச் செல்வார்.

டிரம்ப் பதவியேற்பு விழாவையொட்டி அமெரிக்கா முழுவதும் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. குறிப்பாக வாஷிங்டனில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

போலீசார் மற்றும் சிறப்பு பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். வாஷிங்டனில் டிரம்பின் ஆதரவாளர்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் குவிந்து வருகிறார்கள்.

டிரம்ப் பதவியேற்றதும் தனது முதல் நாளில் எந்த உத்தரவுகளில் கையெழுத்திடுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. குறிப்பாக குடியேற்றம் தொடர்பாக புதிய உத்தரவு வெளியாகலாம்.

Related posts

புடின் மகளுக்கு முதல் தடுப்பூசி ஏற்றப்பட்டது

‘ஜி – 20″ அமைப்பின் தலைவர்கள் விடியோ கலந்துரையாடல்

(United Arab Emirates) ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள இலங்கையர்களுக்கான முக்கிய அறிவிப்பு