வெனிசூலாவிலிருந்து வரும் எரிபொருள் கப்பல்கள் அமெரிக்காவினால் கைப்பற்றப்பட்ட நிலையில், உணவு மற்றும் நிதி உதவிகளுடன் களமிறங்கியுள்ளன ஆசிய வல்லரசுகள்.
ஜனவரி 3 ஆம் திகதி வெனிசுலா மீது அமெரிக்க இராணுவம் நடத்திய தாக்குதலானது கரீபியன் பிராந்தியத்தின் அரசியல் மற்றும் பொருளாதார சூழலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதன் விளைவாக, சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாக அமெரிக்காவின் பொருளாதாரத் தடையை எதிர்கொண்டு வரும் கியூபா, தற்போது ஒரு பாரிய பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துள்ளது.
அமெரிக்காவின் “பூச்சிய எண்ணெய்” கொள்கை முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம், கியூபாவின் பொருளாதாரத்தை முடக்குவதில் தீவிரமாக செயற்பட்டு வருகின்றது.
வெனிசூலாவிலிருந்து கியூபாவுக்கு எரிபொருளை ஏற்றிச் சென்ற பல கப்பல்கள் அமெரிக்கப் படைகளால் கரீபியன் கடலில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளன.
கியூபாவுக்கு இனி ஒரு துளி எண்ணெய் அல்லது பணம் செல்லக்கூடாது என ட்ரம்ப் தனது சமூக வலைத்தள பக்கத்தில் எச்சரித்துள்ளார்.
வெனிசூலாவின் முன்னாள் ஜனாதிபதி ஹியூகோ சாவேஸ் காலத்தில் இருந்து கியூபாவுக்கு வழங்கப்பட்டு வந்த எரிபொருள் விநியோகத்தை அமெரிக்கா தற்போது பலவந்தமாக தடுத்து நிறுத்தியுள்ளது.
சீனாவின் பாரிய மனிதாபிமான உதவி இந்த இக்கட்டான சூழ்நிலையில், சீனா கியூபாவுக்கு தனது ஆதரவை நீட்டியுள்ளது. ஜனவரி 20 ஆம் திகதி, கியூபாவுக்குத் தேவையான 60,000 தொன் அரிசியின் முதற்கட்டத் தொகுதி ஹவானாவைச் சென்றடைந்தது.
இது தவிர, சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் கியூபாவுக்கு 80 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை வழங்க ஒப்புதல் அளித்துள்ளார்.
மேலும், சூரிய சக்தி விளக்குகள், கூரைத் தகடுகள் மற்றும் மெத்தைகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களையும் சீனா அனுப்பி வைத்துள்ளது. “கஷ்ட காலத்தில் உதவுவதே உண்மையான நட்பு” என சீனத் தூதுவர் ஹுவா சின் இதன்போது தெரிவித்துள்ளார்.
கியூபாவுடன் கைகோர்க்கும் ரஷ்யா பொருளாதார ரீதியாக சீனா உதவும் அதேவேளை, அரசியல் மற்றும் இராணுவ ரீதியாக ரஷ்யா கியூபாவுக்குத் தனது ஆதரவை வழங்கி வருகிறது.
ஜனவரி 21 ஆம் திகதி, ரஷ்ய உள்விவகார அமைச்சர் விளாடிமிர் அலெக்ஸாண்ட்ரோவிச் கொலோகோல்ட்சேவ் தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் கியூபா ஜனாதிபதி மிக்வெல் டயஸ்-கனேலைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
கியூபாவின் இறையாண்மையையும் சுதந்திரத்தையும் பாதுகாக்க ரஷ்யா எப்போதும் துணை நிற்கும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உறுதியளித்துள்ளார்.
அமெரிக்காவின் முன்னெப்போதும் இல்லாத வகையிலான இந்த பொருளாதார ஆக்கிரமிப்பிற்கு எதிராக கியூப மக்கள் மீண்டும் ஒருமுறை தங்களின் மனவுறுதியையும் எதிர்ப்பையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
அமெரிக்காவின் நெருக்குதல்களுக்கு மத்தியில் கியூபா தனது புதிய கூட்டணிகள் மூலம் இந்த நெருக்கடியைக் கடக்க முயற்சி செய்து வருகின்றது.
