அமெரிக்காவால் விதிக்கப்பட்ட புதிய 30% தீர்வை வரி தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (10) காலை ஜனாதிபதி செயலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்தக் கலந்துரையாடல், முன்னர் அறிவிக்கப்பட்ட 44% வரியை 30% ஆகக் குறைத்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் முடிவை அடுத்து, இலங்கையின் நிலைப்பாடு மற்றும் எதிர்கால உத்திகளை ஆராய்வதற்காக நடத்தப்பட்டது.
இந்த கலந்துரையாடலில் தொழிலாளர் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, வர்த்தகம், வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கே.ஏ. விமலேந்திராஜா, மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ ஆகியோர் கலந்துகொண்டனர்.