அதிபரும் அரசியல் செயற்பாட்டாளருமான அன்வர் நௌசாத்தின் அட்டாளைச்சேனையில் அமைந்துள்ள வீட்டுக்கு, நேற்று (14) பின்னிரவு, தீ வைப்பதற்கு முயற்சிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அட்டாளைச்சேனையிலுள்ள அன்வர் நௌசாத்தின் வீட்டு வளவுக்குள் புகுந்தவர்கள், வீட்டின் முன் பகுதியில் தீ வைப்பதற்காக, பல இடங்களில் பெற்றோல் ஊற்றியுள்ளனர். இதன்போது, சத்தம் கேட்பதை உணர்ந்து – தான் வெளியில் வந்து பார்த்ததாகவும், பெற்றோல் ஊற்றியவர்கள் தப்பித்து ஓடியதாகவும் அன்வர் நௌசாத் தெரிவித்தார்.
மேலும், தப்பித்து ஓடியவர்கள் கற்களை வீசி தாக்கியதாகவும் அவர் கூறினார்.
இதனையடுத்து பொலிஸ் அவசர இலக்கத்தை தொடர்பு கொண்டு, நடந்த சம்பவம் குறித்து முறையிட்டுள்ளார். அதன் பின்னர் பொலிஸார் தனது வீட்டுக்கு வந்து களத் தகவல்களைப் பெற்றுக் கொண்டதாவும் தெரிவித்தார்.
இதனையடுத்து, இன்று (15) பகல் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில், சம்பவம் தொடர்பாக முறைப்பாடு ஒன்றை அன்வர் நௌசாத் பதிவு செய்துள்ளார்.
சில அரசியல்வாதிகள் தன்னைப் பற்றி தொடர்ச்சியாக பொய்யான தகவல்களைப் பரப்பி வருவதாகவும், நடந்த சம்பவத்துக்கும் அதற்கும் தொடர்புகள் இருக்கலாமா என, தான் சந்தேகப்படுவதாகவும் அன்வர் நௌசாத் மேலும் கூறினார்.
பின்னிரவில் இந்த சம்பவம் நடந்ததை அடுத்து, தனது பிள்ளைகள் அச்சம் காரணமாக தூங்கவில்லை என்றும், அதனால் இன்று பாடசாலையில் நடந்த முதலாம் தவணைப் பரீட்சைக்கு அவர்களால் செல்ல முடியவில்லை எனவும் அன்வர் நௌசாத் கவலை தெரிவித்தார்.