பெருந்தோட்ட தொழிலாளர்களின் இம்மாத சம்பள உயர்வான 400 ரூபா அடுத்த மாதம் வழங்கப்படவுள்ளதால், தனியார் கம்பனிகளும் இந்த சம்பள உயர்வை வழங்க வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இதன் பிரகாரம் மூன்று அரசாங்க பெருந்தோட்ட நிறுவனங்கள்,22 தனியார் தோட்ட நிறுவனங்கள்,சிறுதோட்டஉரிமையாளர் தோட்டங்கள், தனியார் சிறு தோட்டங்கள்,ஆகிய நான்கு பிரிவுகளிலும் தொழில் புரியும் அனைத்து தொழிலாளர்களுக்கும் இந்த சம்பள உயர்வு கிடைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பாராளுமன்றத்தில் நடைபெற்ற தொழில் அமைச்சின் ஆலோசனைக்கூட்டத்தில் அவர் இந்தக் கருத்துக்களை முன்வைத்தார்.
இக்கூட்டத்தில்,தொழில் அமைச்சர் அணில் ஜயந்த பெர்னாண்டோ, பிரதியமைச்சர் மஹிந்த ஜயசிங்க பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், திகாம்பரம், கலைச்செல்வி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இது தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி ஊடக செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; கடந்த வரவு செலவு திட்ட இரண்டாம் வாசிப்பின் போது, அரசுக்கு ஆதரவாக தமிழ் முற்போக்கு கூட்டணி எம்.பிக்கள் வாக்களித்தனர்.
இவ்விடயத்தை வலியுறுத்தியே நாம் வாக்களித்தோம்.அரசாங்கம் சம்பளத்தை அதிகரிக்க முற்படுகையில் தனியார் கம்பனிகள் வேறு கதைகளைச் சொல்ல ஆரம்பித்துள்ளன.
வழமையை விட அதிக நிறையுள்ள கொழுந்து கொண்டு வர வேண்டும்.
இல்லா விட்டால், முழு நாள் சம்பளம் தர மாட்டோம் என்று இப்போதே கம்பனிகள் தொழிலாளரிடம் கூற தொடங்கி விட்டன.
இதை அரசாங்கம் கவனத்தில் எடுக்க வேண்டும்.எல்லா பிராந்தியங்களிலும் ஒரே மாதிரியான, கொழுந்துகள் கிடைப்பதில்லை.
ஆகவே, இதை வைத்து கொண்டு நிறுவனங்கள் சம்பளத்தை குறைத்து வழங்க முற்படக்கூடாது.
இதைக் கண்காணிப்பது அரசின் பணியாகும். அமைச்சர் அணில் ஜயந்த பெர்னாண்டோ, பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க ஆகியோர் இவ்விடயத்தில் கவனம் எடுப்பார்களென நம்புகிறோம்.
