அநுராதபுரம் வைத்தியசாலையில் பயிற்சி பெற்று வந்த விசேட பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரான முன்னாள் இராணுவ வீரர் நீதிமன்றத்தில் மீண்டும் வாக்குமூலம் ஒன்றை வழங்க அனுமதி கோரி விடுத்த கோரிக்கையை அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
அநுராதபுரம் தலைமை நீதவான் நாலக சஞ்சீவ ஜெயசூரிய முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது சந்தேக நபரால் கோரிக்கை விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபரின் கோரிக்கை தொடர்பில் நீதி மன்றில் கருத்து தெரிவித்த அநுராதபுரம் பொலிஸ் நிலைய சிறுவர்கள் மற்றும் மகளிர் பணியகத்தின் உதவி பொலிஸ் பிரசோதகர் ஏ.சி. தயானந்தா, பாதிக்கப்பட்ட வைத்தியர் மீது அவதூறு பரப்புவதற்கும், துன்பப்படுத்தவும் வேண்டுமென்றே பல்வேறு தவறான தகவல்கள் வெளியிட சந்தேக நபர் நீதிமன்றத்தைப் பயன்படுத்த முயற்சிக்கிறார்.
வைத்தியருக்கு உணர்வுபூர்வமான பாதிப்பை ஏற்படுத்துவதற்காக சந்தேக நபர் வேண்டுமென்றே ஊடகங்கள் மூலம் பொய்யான கூற்றுகளைப் பரப்ப முயற்சிக்கிறார்.
இதற்கு முன்னர், சந்தேகநபர் பாலியல் துஷ்பிரயோகம் பலவந்தமாக செய்யப்படவில்லை என திறந்த நீதிமன்றத்தில் தவறான அறிக்கையை வெளியிட்டார்.
எனவே, நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கும் மற்றும் தீங்கிழைக்கும் நோக்கத்துடன் வெளியிடப்படும் இதுபோன்ற பொய்யான அறிக்கைகளை வெளியிட அனுமதிக்க வேண்டாம் என நீதிமன்றத்தை கோரியுள்ளார்.
இதேவேளை, சந்தேகநபர் மறைத்து வைத்திருந்ததாகக் கூறப்படும் வைத்தியரின் கையடக்கதொலைபேசியை மீட்டு அரசாங்க தடயவியல் ஆய்வாளரிடம் அனுப்பி, அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக தற்போது தடுப்புக் காவலில் உள்ள முன்னாள் இராணுவ வீரர், எதிர்வரும் 29 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னர் சந்தேக நபரை டிஎன்ஏ பரிசோதனைக்கு உட்படுத்தி, மருத்துவ அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க அநுராதபுரம் பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
நீதிமன்றத்திற்கு அளித்த மேலதி அறிக்கையின் பிரகாரம், குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகள் இன்னும் நடந்து வருவதாக பொலிஸார் சுட்டிக்காட்டினர்.
கல்னேவ புதிய நகரில் வசிக்கும் முன்னாள் இராணுவ வீரரான சந்தேக நபர், முன்னர் அடையாள அணிவகுப்புக்காக ஆஜர்படுத்தப்பட்ட போது, பாதிக்கப்பட்ட வைத்தியர் அவரை அடையாளம் கண்டார்.