அரசியல்உள்நாடு

அனர்த்தத்தினால் சேதமடைந்த மத, கலாசார, தொல்பொருள் தளங்களை விரைவாக புனரமைக்க நடவடிக்கை – அமைச்சர் ஹினிதும சுனில் செனெவி

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட நாட்டில் உள்ள மத, கலாசார மற்றும் தொல்பொருள் தளங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய புனரமைப்பு பணிகள் குறித்த கலந்துரையாடல் நேற்று (18) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவி தலைமையில் மூன்று நிகாயாக்களின் மகா சங்கத்தினர் மற்றும் ஏனைய மதத் தலைவர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.

நாட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மத, கலாசார மற்றும் தொல்பொருள் தளங்கள் அனர்த்தத்தினால் சேதமடைந்துள்ளதாகவும், அந்த இடங்களில் தேவையான புனரமைப்புப் பணிகளை உடனடியாகத் தொடங்கி, அவற்றை முன்னர் இருந்த நிலைக்கு மீளமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவி தெரிவித்தார்.

மரியாதைக்குரிய மகா சங்கத்தினர் மற்றும் மதத் தலைவர்களின் வழிகாட்டுதலின் கீழ், அந்த இடங்களின் தொன்மையை பாதுகாத்து, அனைத்து தொடர்புடைய தரப்பினரின் பங்கேற்புடன் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

புனரமைப்புப் பணிகளுக்குத் தேவையான மனித வளங்கள் மற்றும் நிதி தற்போது சேகரிக்கப்பட்டு வருவதாகவும், அந்த தளங்கள் தொடர்பான தொழில்நுட்ப மதிப்பீடுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் தேவையான தொழில்நுட்ப அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளதாகவும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பிரின்ஸ் சேனாதீர இங்கு தெரிவித்தார்.

இந்த நடவடிக்கைகளுக்கு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் அதிகாரிகளையும், அதன் கீழ் உள்ள நிறுவனங்களின் அதிகாரிகளையும் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றும் செயலாளர் குறிப்பிட்டார்.

மேலும், சேதமடைந்த மதத் தலங்களை புனரமைப்பதற்காக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழ் நிறுவப்பட்ட நிதியத்திற்கு, தற்போது நன்கொடையாளர்களிடமிருந்து அதிகமான நிதி நன்கொடைகள் கிடைத்து வருவதாகவும் அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

நேற்று கூடிய சபை, இந்தப் புனரமைப்புப் பணிகளை மேற்பார்வையிடும் சர்வமதக் குழுவாகத் தொடர்ந்து செயல்படுவது குறித்தும் கவனம் செலுத்தியதுடன், அதன்படி, நிர்மாணங்களின்

முன்னேற்றத்தை இந்தக் குழுவிடம் தொடர்ந்து முன்வைப்பது குறித்தும், வெளிப்படைத்தன்மையுடன் நிதியத்திற்கான, வெளிநாட்டு உதவிகள், வெளிநாட்டு அமைப்புகள் ,பௌத்த அமைப்புகள் மற்றும் மத அமைப்புகளின் உதவிகளைப் பெறும் பணியை குழுவிடம் ஒப்படைப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டன.

தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சுவரோவியப் பாதுகாவலர்கள் மற்றும் கட்டிடக் கலைஞர்களின் அறிவு தேவைப்படும் அனர்த்தத்தினால் கடுமையாக சேதமடைந்த மற்றும் சாதாரண நிர்மாணத்தின் கீழ் மீளமைக்க முடியாத 08 இடங்களை மத்திய கலாசார நிதியம் அடையாளம் கண்டுள்ளதாகவும், அவற்றுக்கு 500 மில்லியன் ரூபாய்க்கு மேல் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.

இந்த நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாட இன்த குழு மாதத்திற்கு ஒரு முறை கூடுவது என்றும் இதன்போது முடிவு செய்யப்பட்டது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதிலும், பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையை மீட்டெடுப்பதிலும் அரசாங்கம் தலையிட்டதற்கு மதத் தலைவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

மேலும், இந்த விடயங்களை மிகச் சிறப்பாக நிர்வகித்ததற்காக அரசாங்கத்திற்கு தமது பாராட்டுகளைத் தெரிவித்தனர்.

மேலும், சேதமடைந்த மதத் தலங்களை மீண்டும் கட்டியெழுப்புவதில் அரசாங்கத்தின் உடனடி நடவடிக்கைக்கு அவர்கள் தங்கள் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

அஸ்கிரி மகா விகாரை தரப்பின் பதிவாளர் கலாநிதி வண, மெதகம தம்மானந்த நாயக்க தேரர்,அமரபுர சிறி சத்தம்மவங்ச தரப்பின் பதிவாளர் ராஜகீய பண்டித, வண, பலபிட்டியே சிறி சீவலி நாயக்க தேரர், இலங்கை ராமன்ஞ மகா நிகாயவின் பதிவாளர் வண, அத்தங்கனே சாசனரதன நாயக்க தேரர், அகில இலங்கை சாசனரக்ஷக சபையின் பிரதம பதிவாளர் பேராசிரியர் வண, முகுனுவெல அனுருத்த நாயக்க தேரர்,தேசிய பிக்கு முன்னணியின் தலைவரான வண, வகமுல்லே உதித தேரர் தலைமையிலான மூன்று நிகாயாக்களின் மகா சங்கத்தினர், ஸ்ரீமத் ஸ்வாமி அக்ஷரத்மானந்தா உட்பட இந்து மத குருக்கள், அருட்தந்தை அலெக் ரோய் சமந்த பெர்னாண்டோ உட்பட கத்தோலிக்க சபை மற்றும் தேசிய கிறிஸ்தவ பேரவையின் ஆயர்மார், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் மௌலவி உள்ளிட்ட முஸ்லிம் மதத் தலைவர்கள் சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் முகமது முனீர் மற்றும் புத்த சாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களின் அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

-ஜனாதிபதி ஊடகப் பிரிவு

Related posts

அரசாங்கத்திற்கு எதிராக மகிந்த விடுத்துள்ள அறிக்கை…

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்கு 30 பதிலீட்டு ஊழியர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு

editor

தேர்தல் கருத்துக்கணிப்பில் சஜித் முன்ணிலை