அணு ஆயுத சோதனைகளை உடனடியாக மீண்டும் தொடங்கமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அமெரிக்க இராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
ரஷ்யா மற்றும் சீனாவின் அணுசக்தி திட்டங்களுக்கு இணையாக செயல்படும் நோக்கத்துடன் 33 ஆண்டுகளாக அமெரிக்கா கடைப்பிடித்து வந்த தற்காலிக அணுசக்தி சோதனை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து இந்த அதிரடி அறிவிப்பை டிரம்ப் வெளியிட்டுள்ளார்.
1992-ஆம் ஆண்டு முதல் அணு ஆயுத வெடிப்புகளை நிறுத்தி, கணினி உருவகப்படுத்துதல் மற்றும் துணை-நிலை சோதனைகளை (subcritical testing) மட்டுமே அமெரிக்கா மேற்கொண்டு வந்தது.
இந்த நிலையில், ஜனாதிபதி டிரம்ப் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இந்தச் சோதனை நிறுத்தம் முடிவுக்கு வருகிறது.
தனது சமூக ஊடகப் பதிவில் இது குறித்துப் பேசியுள்ள டிரம்ப், “அமெரிக்காவிடம் உலகின் வேறு எந்த நாட்டையும் விட அதிக அணு ஆயுதங்கள் உள்ளன.
ரஷ்யா இரண்டாம் இடத்திலும், சீனா மூன்றாம் இடத்திலும் உள்ளன”.
“ஆனால், ஐந்து ஆண்டுகளுக்குள் சீனா நம்மை சமன் செய்துவிடும். மற்ற நாடுகளின் அணு ஆயுத சோதனை திட்டங்களைக் கருத்தில் கொண்டு, அதே அடிப்படையில் நாமும் சோதனைகளை தொடங்க, போர் துறைக்கு (Department of War) நான் உத்தரவிட்டுள்ளேன். இந்தச் செயல்முறை உடனடியாக ஆரம்பமாகும்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பானது, உலக அளவில் அதிகரித்து வரும் அணுசக்தி போட்டியின் மத்தியில் வந்துள்ளது.
ரஷ்யா சமீபத்தில் முக்கிய ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தங்களில் இருந்து விலகியதுடன், அதன் மேம்பட்ட அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் புரேவெஸ்ட்னிக் அணுசக்தி கப்பல் ஏவுகணை (Burevestnik nuclear cruise missile) போன்றவற்றை சோதித்தது.
சீனா தனது அணு ஆயுதத் திறன்களை மிக வேகமாக நவீனமயமாக்கி வருவதாகவும், ஐந்து ஆண்டுகளுக்குள் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுக்கு இணையாக வந்துவிடும் என்றும் அமெரிக்க உளவுத்துறை எச்சரித்துள்ளது.
டிரம்ப்பின் இந்த நடவடிக்கை, உலகளாவிய ஆயுதக் கட்டுப்பாட்டு முயற்சிகளை மேலும் பாதிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

