அரசியல்உள்நாடு

அடிப்படை உரிமை மீறல் மனுவை வாபஸ் பெற்றார் முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார

கொரிய விசா விவகாரம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் தம்மை கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி, முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் மனு உயர் நீதிமன்றத்தில் இருந்து வாபஸ் பெறப்பட்டுள்ளது.

இம்மனு இன்று (19) எஸ். துரைராஜா தலைமையிலான மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரலும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான லக்மாலி கருணாநாயக்க சமர்ப்பணங்களை முன்வைக்கையில், இந்த வழக்கு தொடர்பான மட்டுப்படுத்தப்பட்ட ஆட்சேபனைகளை பிரதிவாதிகள் சார்பில் தான் தாக்கல் செய்துள்ளதாகத் தெரிவித்தார்.

அதற்கமைய, குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகரவின் சத்தியக்கடதாசி ஒன்றையும் பிரதிவாதிகள் தரப்பு நீதிமன்றில் சமர்ப்பித்திருந்தது.

மனு விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது மனுதாரர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் நீதிமன்றில் சமரப்பணங்களை முன்வைக்கையில், தமது கட்சிக்காரரை இச்சந்தர்ப்பத்தில் கைது செய்வதில்லை என குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதவான் நீதிமன்றிற்கு அறிவித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

அதற்கமைய, மனுவைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லத் தேவையில்லை எனவும் அதனை வாபஸ் பெற அனுமதிக்குமாறும் ஜனாதிபதி சட்டத்தரணி நீதிமன்றில் கோரிக்கை விடுத்தார்.

அந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதியரசர்கள் குழாம், குறித்த மனுவை வாபஸ் பெற அனுமதி வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

இறக்குமதி மருந்துகளை விடுவிக்க விசேட குழு!

சர்வதேச தாய் மொழி தினம் இன்று !

லலித் – குகன் வழக்கில் சாட்சியமளிக்க தயார் என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவிப்பு

editor