அசாமின் மத்திய பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அசாமின் மத்திய பகுதியில், இன்று (05) ரிச்டர் அளவில் 5.1 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் பிரம்மபுத்திராவின் தெற்குக் கரையில் உள்ள மோரிகான் மாவட்டத்தில் 50 கி.மீ ஆழத்தில் அதிகாலை 4.17 மணியளவில் பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தின் மையம் மத்திய அசாமில் 26.37 N அட்சரேகை மற்றும் 92.29 E தீர்க்கரேகையில் அமைந்துள்ளது.
இருப்பினும் நிலநடுக்கத்தால் யாருக்கும் காயம் ஏற்பட்டதாகவோ அல்லது சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டதாகவோ உடனடி தகவல் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலஅதிர்வை அண்டை பகுதிகளான கம்ரூப் பெருநகரம், நாகோன், கிழக்கு கர்பி அங்லாங், மேற்கு கர்பி அங்லாங், சிவசாகர், கச்சார், கரீம்கஞ்ச், துப்ரி, கோல்பாரா மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களும் உணர்ந்தனர்.
மேலும் இந்த நிலநடுக்கம் அருணாசலப் பிரதேசத்தின் சில மத்திய-மேற்கு பகுதிகள், மேகாலயா மற்றும் நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா மற்றும் மேற்கு வங்கத்தின் பல பகுதிகளில் உணரப்பட்டது.
அதேசமயம் மத்திய கிழக்கு பூட்டான், சீனாவின் சில பகுதிகள் மற்றும் வங்க தேசமும் அதிர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
