உள்நாடுபிராந்தியம்

விசிநவ பிரதேசத்தில் பள்ளிவாசல்கள் சம்மேளனம் அங்குரார்ப்பணம்

விசிநவ பிரதேசத்தின் அபிவிருத்திகளையும், திட்டமிடல்களையும் இலக்காக வைத்து சுமார் 07 வருடங்களுக்கு முன்பு “விசிநவ ஒன்றிணைக்கப்பட்ட சிவில் அமைப்பு” ஆரம்பிக்கப்பட்டது.

குளியாபிடிய-கிழக்கு பிரதேச செயலக முஸ்லிம் கிராமங்கள், நாரம்மல பிரதேச செயலகத்தின் சில முஸ்லிம் கிராமங்கள் என்பவற்றை ஒருங்கிணைத்து செயற்பட, பல வேலைத்திட்டங்களை இந்த அமைப்பு கடந்த காலங்களில் முன்னெடுத்திருக்கின்றது.

சுமார் 17 ஜும்மா பள்ளிகள், 20 தக்கியாக்கள், 07 ஜம்மியதுல் உலமா கிளைகள் என்பவற்றை ஒன்றிணைத்து சுமார் 23500 பேர் கொண்ட (சுமார் 7 வருடங்களுக்கு முன்னான கணக்கெடுப்பு) இந்த கிராமங்களில் அபிவிருத்தி நடவடிக்கைகளை கூட்டாக செயற்படுத்த சில திட்டங்களையும் இந்த அமைப்பு செயற்படுத்தி வருகின்றது.

அதனடிப்படையில் விசிநவ ஒன்றிணைக்கப்பட்ட சிவில் அமைப்பானது இந்த பிரதேசத்துக்கான தற்காலிக பள்ளிவாசல்கள் சம்மேளனத்தை அங்குரார்ப்பணம் செய்து வைத்தது.

நிகழ்வில் விசிநவ பிரதேசத்து 49 பள்ளிவாசல்கள் நிர்வாகிகளும், 7 ஜம்மிய்யா கிளைகளது உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

நேற்று (2025.07.20) ஞாயிற்றுக்கிழமை, சியம்பளாகஸ்கொடுவ அந்நூர் அரபுக் கலாசாலையின் கேட்போர் கூடத்தில் மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.

நிகழ்வின் பிரதம அதிதியாக அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்ஷேக் A. அர்கம் நூராமித் கலந்து உரை நிகழ்த்தியிருந்தார்.

சிறப்பதிதியாக கண்டி, மஸ்ஜிதுல் ஹைராத் ஜும்மா பள்ளிவாசலின் தலைவர் அல்ஹாஜ் A.R.M. நியாஸ் கலந்து கொண்டிருந்தார்.

நிகழ்வின் இறுதியில் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தெரிவு இடம்பெற்றிருந்தது. ஒவ்வொரு பிரதேசத்துக்குமான உறுப்பினர்களை பள்ளிவாசல் சார்பாக கலந்து கொண்டிருந்த நிர்வாகிகள் தெரிவு செய்திருந்தனர்.

தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களிலிருந்து நிர்வாகத்தை அமைக்கின்ற பொதுக்கூட்டம் எதிர்வரும் 28 ம் திகதி திங்கட்கிழமை நடைபெறும் என்றும் சம்மேளனத்துக்கான பதவி நிலை உத்தியோகத்தர்கள் தெரிவு அன்றைய தினம் நடைபெறும் எனவும் ஏக மனதாக தீர்மானம் எட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

-சப்ராஸ் அபூபக்கர்

Related posts

20 இற்கு எதிராக முதல் மனுத்தாக்கல்

கொரோனா : 342 பேர் அடையாளம்

முஸ்லிம் தனியார் சட்டத்தில் ரவூப் ஹக்கீம் கையொப்பம் இட வேண்டும் – இனாமுல்லாஹ்