நாட்டின் ஆட்சியாளர்கள் பௌத்த மதத்தைப் பாதுகாக்கக் கடமைப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அன்னியர் ஆட்சிக் காலத்தில்கூட பௌத்த மதத்தைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்த பின்னணியில், தற்போதைய ஆட்சியாளர்கள் அப்பொறுப்பிலிருந்து விலகிக்கொள்ள முடியாது என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
காலி பிரதேசத்தில் நடைபெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ரணில் விக்ரமசிங்க இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.
அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,
“விகாரைகள் மற்றும் தேவாலயங்கள் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதற்கமைய விகாரைகளுக்குச் சொந்தமானவை விகாரைகளுக்கும், தேவாலயங்களுக்குச் சொந்தமானவை தேவாலயங்களுக்கும் உரியனவாகும்.
நாம் வழங்கும் தங்க நகைகள் அனைத்தும் விகாரைகளுக்கோ அல்லது தேவாலயங்களுக்கோ சொந்தமானவை.
அவற்றில் கைவைக்கச் சென்று நாட்டுக்கு என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியாது.”
“1815 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் மூன்றாம் ஜோர்ஜ் மன்னர் பௌத்த மதத்தைப் பாதுகாப்பதாகப் பொறுப்பேற்றிருந்தார்.”
“இதை ஏற்றுக்கொண்டு மகா சங்கத்தினருடன் இணைந்து இதனைப் பாதுகாப்பது அனைத்துக் கட்சிகளினதும் கடமையாகும்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
