உள்நாடு

றிஸ்வி முப்தியின் பங்கேற்புடன் இடம்பெற்ற எஸ்.எச். ஆதம்பாவா மௌலவியின் கெளரவிப்பு விழா!

அம்பாறை மாவட்ட ஜம்இய்யதுல் உலமாவின் முன்னாள் தலைவரான அஷ்ஷெய்க் எஸ்.எச். ஆதம்பாவா அவர்களுக்கான கௌரவிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை (26) சாய்ந்தமருது, மாளிகைக்காடு பாவா றோயல் வரவேற்பு மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

அம்பாறை மாவட்ட ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் அஷ்ஷெய்க் ஐ.எல்.எம். ஹாஷிம் மதனி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஜ.எம். றிஸ்வி முப்தி அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றியதுடன் விழா நாயகனுக்கான பிரதான கெளரவ விருதையும் வழங்கி வைத்தார்.

அல்ஹாபிழ் சஜீத் சலீம் அவர்களின் கிறாஅத்துடன் ஆரம்பமான இவ்விழாவில் அம்பாறை மாவட்ட ஜம்இய்யதுல் உலமாவின் செயலாளர் அஷ்ஷெய்க் ஏ.எல். நாஸிர் கனி வரவேற்புரை நிகழ்த்தினார்.

சாய்ந்தமருது ஜம்இயத்துல் உலமாவின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம். சலீம் விஷேட உரை நிகழ்த்தினார்.

கலாநிதி அஷ்ஷெய்க் எம்.எம்.எம். பஷீர், அஷ்ஷெய்க் ஆசாத் ஷாமில், அஷ்ஷெய்க் அபூபக்கர் றிஸ்வின் ஆகியோரின் தயாரிப்பில் அஷ்ஷெய்க் எஸ்.எச்.ஆதம்பாவா மதனி பற்றிய விவரணக் காணொளி ஒன்றும் விஷேடமாக காட்சிப்படுத்தப்பட்டது.

அத்துடன் சமய, சமூக மற்றும் கல்வித் துறைகளில் அவர் ஆற்றிய உன்னத சேவைகள் பற்றிய சிறப்புக் கட்டுரைகள் மற்றும் வாழ்த்துச் செய்திகள் அடங்கிய
“நினைவுச் சோலை” எனும் சிறப்பு மலர் ஒன்றும் வெளியிட்டு வைக்கப்பட்டது.

அம்பாறை மாவட்ட ஜம்இய்யதுல் உலமாவின் பொருளாளர்
அஷ்ஷெய்க் இஸட்.எம். நதீர் அவர்கள் இந்த சிறப்பு மலரின் அறிமுக உரையை நிகழ்த்தினார்.

சிறப்பு மலரின் முதல் பிரதிகள் 10 பிரமுகர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.

விழா நாயகனுக்காக வாழ்த்துப்பா ஒன்றும் வாசிக்கப்பட்டு, அவரிடம் கையளிக்கப்பட்டது.

அத்துடன் ஜம்இய்யதுல் உலமாவின் அம்பாறை மாவட்டத்தில் உள்ள 14 பிரதேசக் கிளைகள் சார்பிலும் அவர் பொன்னாடை போர்த்தி, நினைவுச் சின்னங்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டார்.

பிரதம அதிதியாக கலந்து கொண்ட றிஸ்வி முப்தி அவர்களுக்கு அம்பாறை மாவட்ட ஜம்இய்யதுல் உலமாவின் சார்பில் விசேட நினைவுச் சின்னம் ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டது.

அஷ்ஷெய்க் எஸ்.எச்.ஆதம்பாவா மதனி ஏற்புரையையும் அம்பாரை மாவட்ட ஜம்இய்யதுல் உலமாவின் உதவிச் செயலாளர் எம்.எல்.பைசால் நன்றியுரையையும் நிகழ்த்தினர்.
வானொலி அறிவிப்பாளர் ஏ.எல்.எம். நயீம் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

இந்நிகழ்வில் உலமாக்கள், கல்விமான்கள், பள்ளிவாசல்களின் நிர்வாகிகள், ஊர்ப்பிரமுகர்கள் என பல தரப்பினரும் கலந்து கொண்டனர்.

-அஸ்லம் எஸ்.மெளலானா

Related posts

அரச சேவைகள் தொடர்பான புதிய குழு

அரச வருவாயில் அதிகரிப்பு – இலங்கை மத்திய வங்கி

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளருக்கு விளக்கமறியல்

editor