அரசியல்உள்நாடு

ரமழான் கற்றுத் தரும் பாடங்களை இஸ்லாமியர்கள் மட்டுமின்றி, அனைத்து மதத்தவரும் கடைபிடிக்க வேண்டும் – நோன்பு பெருநாள் வாழ்த்துச் செய்தியில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

இறை தூதவர் நபிகள் நாயகம் போதித்த சமத்துவம், சுய கட்டுப்பாடு, நல்லொழுக்கம், அன்பு, பரிமாற்றம், ஒற்றுமை, சமாதானம் ஆகியவற்றை நாம் அனைவரும் கடைபிடித்து நாட்டில் நல்லிணக்கத்தையும், சகோதரத்துவத்தையும் மேம்படுத்துவோம் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தனது நோன்பு பெருநாள் வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ரமழான் என்பது மனிதர்களை அனைத்து வகையிலும் பக்குவப்படுத்தும் ஓர் இனிய திருநாளாகும்.

ரமழான் கற்றுத் தரும் இந்தப் பாடங்களை இஸ்லாமியர்கள் மட்டுமின்றி, அனைத்து மதத்தவரும் கடைபிடிக்க வேண்டும்.

அதை கடைப்பிடித்தால் உலகம் முழுவதும் மனிதம் தழைக்கும் என்பது உறுதி.

உலகம் முழுவதும் வாழும் மக்களிடம் அன்பு, நல்லிணக்கம், சகிப்புத் தன்மை, சகோதரத்துவம், ஈகை உள்ளிட்ட நற்குணங்கள் பெருகவும், அமைதி, வளம், முன்னேற்றம், ஒற்றுமை, மகிழ்ச்சி ஆகியவை தழைக்கவும் உழைக்க ஈகைத் திருநாள் கொண்டாடப்படும் இந்நாளில் அனைவரும் உறுதியேற்போம்.

உடலையும், உள்ளத்தையும் ஒருநிலைப்படுத்தி, தூய்மை உணர்வோடு புனித ரமலான் மாதத்தில் நோன்பிருந்து, ஈகையின் சிறப்பினை எல்லோருக்கும் உணர்த்தும் வகையில், ஈட்டிய செல்வத்தில் ஒரு பங்கை ஏழை எளியோருக்கு அளித்து, அனைவரும் இன்புற்று வாழ்ந்திட வேண்டி இறைவனை தொழுது, இஸ்லாமியப் பெருமக்கள் ரமலான் பண்டிகையைக் கொண்டாடி மகிழ்வார்கள்.

எமது நாட்டில் குறிப்பாக வடக்கு மாகாணத்தில் வாழும் இஸ்லாமிய சொந்தங்களின் தேவைப்பாடுகளை நாம் நிச்சயம் நிறைவேற்றுவோம். அவர்களுக்குரிய மத சுதந்திரம் பாதுகாக்கப்படும்.

கடந்தகாலங்களில்போல் அல்லாமல் சகோதரத்துவத்துடன் பண்டிகையை கொண்டாடும் காலம் உதயமாகியுள்ளது என்றார்.

Related posts

மஹிந்தானந்தவை விரட்டும் கொரோனா

மியன்மாருக்கு செல்லவுள்ள இலங்கை வைத்திய குழு தொடர்பில் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ வெளியிட்ட தகவல்

editor

கரன்னாகொட, தசநாயக்க மீதான வழக்கு விசாரணையை இடைநிறுத்துமாறு அறிவிப்பு