உள்நாடுபிராந்தியம்

மூதூரில் பெரும் வெள்ளப் பேரழிவு – பல கிராமங்கள் நீரில் மூழ்கி மக்கள் அவதி

நாட்டில் நிலவியுள்ள அசாதாரண கனமழையின் தாக்கத்தால் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகள் இன்று (27) முழுமையாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

திடீரென அதிகரித்த நீர்மட்டம் காரணமாக மக்கள் இரவு நேரங்களில் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

நெய்தல் நகர், அக்கரைச்சேனை, ஜாயா நகர், பாலநகர், அரபிக் கல்லூரி வீதி, சாபிநகர், கைதரியா நகர், பஹ்ரியா நகர், தக்வா நகர், ஹபிள் நகர், சேனையூர், சம்பூர் மற்றும் கட்டை பரிச்சான் உள்ளிட்ட பல பகுதிகள் கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

இப்பகுதிகளில் வீடுகள், சாலைகள் மற்றும் பொதுக் கட்டிடங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளதால் பல்வேறு அத்தியாவசிய சேவைகளும் தடுமாறியுள்ளன.

மேலும், பெரும் பரப்பளவில் பரவியுள்ள விவசாய நிலங்களும் நீரில் மூழ்கியதால் பயிர் சேதம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்து வருகின்றனர்.

வெள்ளம் அதிகரித்ததை அடுத்து, தங்கள் வீடுகளில் தங்க முடியாத நிலையில் பல குடும்பங்கள் தற்போது தங்கள் உறவினரின் வீடுகளிலும் பாதுகாப்பான இடங்களிலும் தஞ்சம் அடைந்துள்ளதாக தெரிய வருகிறது.

சிலர் தற்காலிக முகாம்களை நோக்கியும் செல்லத் தொடங்கியுள்ளனர்.

நிலைமை மேலும் கடுமையடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதால், அதிகாரிகள் மக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறும், பாதுகாப்பான இடங்களில் தங்குமாறும் அறிவுறுத்தி வருகின்றனர்.

தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு மீட்பு மற்றும் நிவாரண பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

-முஹம்மது ஜிப்ரான்

Related posts

50 இலட்சம் ரூபாய் ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது

editor

ஆயுதப்படையின் நினைவாக பொப்பி மலர் தினம் ஜனாதிபதி தலைமையில் அனுட்டிப்பு

editor

கடந்த 24 மணி நேரத்தில் 200 பேர் சிக்கினர்