அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி ரணிலை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதில் சிக்கல்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவக் கண்காணிப்பில் வைக்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளதால், இன்று (26) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்துவது சாத்தியமில்லை என சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஜூம் தொழில்நுட்பம் மூலம் சட்ட நடவடிக்கைகளுக்கு ஆஜர்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டால், அதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்ய முடியும் என ஜகத் வீரசிங்க மேலும் தெரிவித்தார்.

பொது நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கடந்த ஓகஸ்ட் 22ஆம் திகதி கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி, ஓகஸ்ட் 26 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

கைது செய்யப்பட்ட அன்று, உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், மற்றும் நீர் இழப்பு காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், மருத்துவப் பரிந்துரையின் பேரில் மறுநாள் (23) கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

தற்போது, ஐந்து விசேட வைத்தியர்கள் கொண்ட குழு அவரது உடல்நிலையைக் கண்காணித்து வருகிறது.

இந்நிலையில், கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் பாதுகாப்பு பணிகளுக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.

நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைபவர்களின் வழக்கு எண்கள் சரிபார்க்கப்பட்டு, பயணப் பொதிகள் மற்றும் நபர்கள் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

கியூ வீதியில் வசிப்பவர்கள் மற்றும் சட்டத்தரணிகள் மட்டுமே அந்த வீதிக்குள் நுழைய அனுமதிக்கப்படுகின்றனர்.

வீடியோ

Related posts

மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் தலைவராக ஏ.எச்.எம்.டீ. நவாஸ் [VIDEO]

 ஏப்ரல் 10 முதல் விசேட பஸ் சேவை

தேர்தல் வரலாற்றில் மஹிந்த சாதனை