தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெளிநாட்டுப் பயணத்திற்கான நிதியை அங்கீகரித்ததற்காக முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டமை மற்றும் அதன் விசாரணைகள் தொடர்பில் இன்று (23) நடைபெற்ற விசேட பொலிஸ் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய சட்டத் துறைக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் கலிங்க ஜயசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அப்போது, குறித்த சம்பவம் தொடர்பாக சமன் ஏக்கநாயக்கவும் கைது செய்யப்பட உள்ளாரா? என்று ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
விசாரணைகள் நடைபெற்று வருவதால், இந்த விடயம் குறித்து கருத்து தெரிவிக்க முடியாது என்று இதன்போது கலிங்க ஜயசிங்க கூறினார்.
வெளிநாட்டுப் பயணத்தின் போது அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (22) பிற்பகல் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டார்.
இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக அவர் அங்கு அழைக்கப்பட்ட போதே இந்த கைது இடம்பெற்றது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது பதவிக் காலத்தில், 2023 செப்டம்பர் 22 மற்றும் 23 ஆம் திகததிகளில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவின் நியூயோர்க்கிற்குச் சென்றிருந்தார்.
இந்த விஜயத்தை முடித்துக்கொண்டு நாட்டுக்கு திரும்புவதற்கு முன்பு, முன்னாள் ஜனாதிபதி தனது மனைவி மைத்ரி விக்கிரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள லண்டன் சென்றிருந்தார்.
இங்கிலாந்தின் வோல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் ஜோன் ரெஃப்டர், லண்டனில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயம் மூலம் முன்னாள் ஜனாதிபதி மற்றும் அவரது மனைவிக்கு அதிகாரப்பூர்வமாக அழைப்பிதழ் அனுப்பியிருந்தார்.
இருப்பினும், முன்னாள் ஜனாதிபதி இந்த விஜயத்தின் போது அரசாங்க நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறி ஒருவர் சமீபத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு அளித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, விசாரணை தொடங்கப்பட்டு, முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்க மற்றும் விக்கிரமசிங்கவின் பிரத்தியேக உதவியாளர் செண்ட்ரா பெரேரா ஆகியோரிடமிருந்தும் அந்தத் திணைக்களம் சமீபத்தில் வாக்குமூலங்களைப் பெற்றது.
அதைத் தொடர்ந்து, ரணில் விக்கிரமசிங்கவை நேற்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டது.
அதன்படி, நேற்று காலை 9.00 மணியளவில் அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜரானார்.
சுமார் 4 மணி நேரம் வாக்குமூலங்களைப் பதிவு செய்த பின்னர், முன்னாள் ஜனாதிபதி பிற்பகல் 1.15 மணியளவில் கைது செய்யப்பட்டார்.
பின்னர், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சார்பாக ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் மற்றும் சந்தேகநபர் ரணில் விக்ரமசிங்க சார்பாக ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜா பிரேமரத்ன ஆகியோரின் வாதங்களை பரிசீலித்த கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர இந்த உத்தரவை பிறப்பித்தார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அவரின் உடல்நிலையை பரிசோதித்த சிறைச்சாலை வைத்தியர்களின் பரிந்துரைகளுக்கு அமைய அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் பின்னர் அவசர பிரிவில் ICU வுக்கு மாற்றப்பட்டார்.