அரசியல்உள்நாடு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை 400 ஆண்டுகள் சிறையில் அடைக்க வேண்டும் – சரத் பொன்சேகா

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை 400 ஆண்டுகள் சிறையில் அடைக்க வேண்டும் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குற்றம் சாட்டியுள்ளார்.

2010ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற ஊழல்களை எடுத்துக்காட்டி, அவர் குற்றம் சாட்டியதாக தெரிவிக்கப்படுகிறது.

நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், அடுத்தடுத்து வந்த இலங்கைத் தலைவர்களை விமர்சித்தார்.

இதன்போது, தேசிய வளர்ச்சிக்கான தொலைநோக்கு பார்வை, இலங்கை தலைவர்களுக்கு இல்லை என இதன்போது அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிங்கப்பூரின் லீ குவான் யூ, மலேசியாவின் மகாதீர் முகமட் மற்றும் ருவாண்டாவின் ஜெனரல் ஜுவெனல் ஹப்யரிமனா போன்ற சர்வதேச பிரமுகர்களுடன் இலங்கை முன்னாள் தலைவர்களை ஒப்பிட்டு வேறுபடுத்தி இதன்போது அவர் உரையாற்றியுள்ளார்.

தனிநபர்களின் பெயர்களைக் குறிப்பிடாமல் கடந்த கால சம்பவத்தைக் குறிப்பிட்டு தமது கருத்துக்களை சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

2010 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிகால பகுதியில் சீனாவிற்கு மேற்கொண்ட அரச பயணத்தையும் இதன்போது அவர் நினைவுப்படுத்தினார்.

அந்த பயணத்தின் போது 65 பேர் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் உத்தியோகபூர்வமாக அழைத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நடவடிக்கைகளை அவர் மன்னிக்கவில்லை என்றாலும், அதிகாரிகளை பொறுப்புக்கூற வைப்பதில் தற்போதைய நிர்வாகம் வகுத்த முன்னுதாரணத்தை ஆதரிப்பதாகவும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, ரணில் விக்கிரமசிங்க செய்தது சரி என நான் கூறவில்லை. அவரது நிலையை பார்ப்பது எனக்கு கவலையாக இருக்கிறது.

அவர்தான் என்னை அரசியலுக்குக் கொண்டு வந்தவர். ஆனால் இந்த வழக்கில், அரசாங்கம் அமைத்த முன்னுதாரணத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன் என இதன்போது சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

அதேநேரம், மஹிந்த ராஜபக்ஷ போன்ற ஒருவருக்கு சுமார் 400 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாமல் ராஜபக்ஷவின் கடந்த கால சிறைத்தண்டனை குறித்து சமீபத்தில் தெரிவித்த கருத்துகளுக்கும் சரத் பொன்சேகா பதிலளித்தார்.

இராணுவத் தலைமையகத்தில் பணியாற்றிய 35 சிரேஸ்ட இராணுவ அதிகாரிகளை ஓய்வூதியம் இல்லாமல் இராணுவ சேவையிலிருந்து வெளியேற்றியதாக மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் மீது சரத் பொன்சேகா நிகழ்வில் உரையாற்றும்போது குற்றம் சுமத்தியுள்ளார்.

Related posts

இலங்கையர்களுக்கு 90 நாள் இலவச on-arrival விசாக்களை வழங்கும் மாலைத்தீவு

editor

கண்டியினை பிரதிநிதித்துவப்படுத்தி திஸ்ஸ வேட்பாளராக

கோட்டாபயவை தாக்கும் குமார வெல்கம