உள்நாடு

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகனுக்கு எதிரான வழக்கு திகதியிடப்பட்டது

சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை ஈட்டியதாகக் குற்றம் சுமத்தி, முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் புதல்வர் ரமித ரம்புக்வெல்லவுக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கை, மேலதிக விசாரணைக்கு முந்தைய மாநாட்டிற்காக (Pre-trial conference) எதிர்வரும் பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (13) உத்தரவிட்டது.

இந்த வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹால் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் இந்த வழக்குடன் தொடர்புடைய சில ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து, அந்த ஆவணங்களின் பிரதிகளை பிரதிவாதி தரப்பினருக்கு வழங்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை கருத்திற்கொண்ட நீதிபதி, வழக்கின் விசாரணைக்கு முந்தைய மாநாட்டை அடுத்த தவணையில் நிறைவு செய்ய வேண்டும் என இரு தரப்பினருக்கும் அறிவித்தார்.

அதற்கமைய, மேலதிக விசாரணைக்கு முந்தைய மாநாட்டிற்காக இந்த வழக்கை பெப்ரவரி 11 ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

2020 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 13 ஆம் திகதி முதல் 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள், முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் தனிப்பட்ட செயலாளராகப் பணியாற்றிய போது, 27 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய சொத்துக்களை முறையற்ற விதத்தில் ஈட்டியமை தொடர்பில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் இந்த குற்றச்சாட்டுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

Related posts

சகல பாடசாலைகளும் இன்று மீளவும் திறக்கப்பட்டன

UPDATE – மேல் மாகாணம் முழுவதும் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்கு

நாடளாவிய திரையரங்குகள் 2ஆம் திகதி திறக்கப்படும்