எதிர்காலத்தில் நிர்மாணப் பணிகள் நிறைவடையவுள்ள கெரவலப்பிட்டிய சஹஸ்தனவி நீர்ம இயற்கை வாயு (LNG) மின் உற்பத்தி நிலையத்திற்கான அனுமதி பெறப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்தில் உள்ள விலைகளை தற்போதைய நிலைக்கு ஏற்ற வகையில் திருத்த வேண்டியதன் தேவை உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் சுட்டிக்காட்டப்பட்டது.
இந்தக் கொள்முதல் செயல்முறை 2021 இல் ஆரம்பிக்கப்பட்ட போது காணப்பட்ட எரிபொருள் விலை மற்றும் டொலரின் பெறுமதி போன்ற காரணிகளின் அடிப்படையில் அந்த விலைகள் அமைந்திருப்பதால், தற்போதைய விலை நிலவரம் குறித்து அமைச்சரவைக்குத் தெரிவிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு வலுசக்தி அமைச்சுக்கு குழு அறிவித்தது.
கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தலைமையில் அண்மையில் (25) பாராளுமன்றத்தில் இந்தக் குழு கூடிய போது இந்த அறிவித்தல் வழங்கப்பட்டது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான நலீன் பண்டார மற்றும் ஜகத் வித்தான ஆகியோரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
வலுசக்தி அமைச்சின் செயலாளர் மற்றும் இலங்கை மின்சார சபை, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஆகிய நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
2020 இல் அமைச்சரவை அனுமதி கிடைத்ததைத் தொடர்ந்து, இலங்கை மின்சார சபையினால் 350MW திறன் கொண்ட LNG மின் உற்பத்தி நிலையத்தை அமைப்பதற்கான சர்வதேச போட்டித்தன்மை கொண்ட விலை மனுச் செயன்முறையின் மூலம் வெளிப்படைத்தன்மையுடன் இந்த நிறுவனம் தெரிவு செய்யப்பட்டதாகவும், 2023 இல் இந்தத் திட்டம் வழங்கப்பட்டதாகவும் வலுசக்தி அமைச்சின் செயலாளர் மற்றும் இலங்கை மின்சார சபையின் அதிகாரிகள் இதன்போது குறிப்பிட்டனர்.
LNG மற்றும் டீசல் ஆகிய இரண்டின் மூலமும் இயங்கக்கூடிய சோபாதனவி மின் உற்பத்தி நிலையம் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. அந்த மின் உற்பத்தி நிலையம் தொடர்ந்தும் டீசல் மூலமாக மாத்திரம் இயங்குவது குறித்து இதன்போது வினவப்பட்டது.
கடலில் மிதக்கும் களஞ்சிய முறைமை (FSRU) மூலம் தனித்துவமான கொள்முதல் செயல்முறை ஊடாக ஒரு விநியோகஸ்தரை தேர்ந்தெடுத்து LNG ஐ வெளியிலிருந்து வழங்க வேண்டும் என்றும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
அதற்கமைய, இந்த நடவடிக்கைகளை விரைவாக மேற்கொண்டு LNG மூலம் இந்த மின் உற்பத்தி நிலையத்தை இயக்குவதன் அவசியத்தை குழு வலியுறுத்தியது.
அத்துடன், சொபாதனவி திட்டத்தைப் பற்றி மீளாய்வு செய்து, அதில் குறைபாடுகள் இருந்தால், அவை சஹஸ்தனவி திட்டத்தில் ஏற்படாதவாறு ஒரு தெளிவான வழிகாட்டியைத் தயாரிப்பதன் அவசியத்தை எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.
சஹஸ்தனவி மின் உற்பத்தி நிலையம் 2027 ஆம் ஆண்டின் இறுதியில் செயற்பாட்டிற்கு வரும் என்றும், 2028 ஆம் ஆண்டின் இறுதிக்குள் இந்த மின் உற்பத்தி நிலையங்கள் LNG மூலம் இயக்கப்பட வேண்டும் என்று கௌரவ ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதற்கமைய, இந்த முறைமைகள், திட்டங்கள் மற்றும் தற்போதைய நிலை குறித்த தெளிவான குறுகிய அறிக்கையொன்றை இரண்டு வாரங்களுக்குள் குழுவிடம் சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு குழு அறிவித்தது.