அரசியல்உள்நாடு

மின்சாரக் கட்டணங்களை அதிகரிக்கும் அரசாங்கத்தின் சட்டவிரோத முயற்சி எமது ஜனநாயகப் போராட்டத்தின் காரணமாகவே நிறுத்தியது – சஜித் பிரேமதாச

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம், தேர்தல்களின் போது வாக்குறுதியளித்தபடி மின்சாரக் கட்டணங்களை 33% ஆல் குறைப்போம் என தொடர்ச்சியாக பிரஸ்தாபித்து வந்த போதிலும், ஆட்சிக்கு வந்த பிற்பாடு மின்சாரக் கட்டணங்களை 11.57% ஆல் அதிகரிப்பதற்கான தீர்மானத்தை முன்வைத்திருந்தது.

அரசாங்கத்தின் இந்த தீர்மானத்தை இன்று நிராகரித்தமைக்கு இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிற்கு நாங்கள் நன்றி கூறுகிறோம்.

மின்சாரக் கட்டணத்தை 33% ஆல் குறைக்க அரசாங்கம் வாக்குறுதியளித்திருந்தது.

இது சமூக ஒப்பந்தமாக அமைந்து காணப்படுவதனால் இதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று விசேட கூற்றை முன்வைத்து கருத்துத் தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கம் வாக்காளர்களுடன் செய்து கொண்ட சமூக ஒப்பந்தத்தை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும். தற்போதைய அரசாங்கம் தவறான மின்சாரக் கொள்கையை முன்னெடுத்து வருகிறது.

நிலக்கரி, எரிபொருள் மற்றும் அனல் மின் நிலைய மாபியாவை வலுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றது.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை வலுப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகக் கூறிய தற்போதைய அரசாங்கம், தற்சமயம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை இல்லாதொழிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதே நேரத்தில் 70 இலட்சத்துக்கும் அதிகமான மின்சார நுகர்வோருக்கு மின்சாரக் கட்டணங்களை அதிகரித்து விட்டு, அடிக்கு மேல் அடியை மேற்கொண்டு வருகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

எரிபொருள் மற்றும் அனல் மின் நிலைய மாபியாவின் கைகளில் சிக்கியுள்ள தற்போதைய அரசாங்கம், மின்சார நுகர்வோரின் உரிமைகளை மீறுவதற்கு எம்மால் இடமளிக்க முடியாது.

பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும், வீதிகளில் போராட்டங்கள் மூலம் மின்சார நுகர்வோரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி முன்னணிலை வகித்து செயற்படும். பொதுப் பயன்பாட் ஆணைக்குழு இன்று மக்களின் குரலுக்கு செவிசாய்க்க வேண்டி ஏற்பட்டுள்ளது.

இனிமேலும் அரசாங்கம் மின்சாரக் கட்டணங்களை அதிகரிக்க முயற்சிக்கக்கூடாது. பல தேர்தல்களின் போது வாக்குறுதியளித்தபடி, மின்சாரக் கட்டணத்தை 33% ஆல் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

மின்சாரக் கட்டணங்களைக் குறைப்பதற்கும், புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பாதுகாப்பதற்கும் ஐக்கிய மக்கள் சக்தி தன்னால் முடிந்த அதிகபட்ச பங்களிப்பைப் பெற்றுத் தரும்.

பொது மக்களின் உரிமைகளுக்காகப் போராடும் ஐக்கிய மக்கள் சக்தி தொடர்ந்தும் தலைமைத்துவத்தை வழங்கும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.

Related posts

பேருந்து மோதியதில் பெண் ஒருவர் பலி

editor

மனைவி, காதலி மற்றும் நண்பர்களின் பெயர்களைப் பயன்படுத்தி சட்டவிரோத சொத்து – நிமால் சிறிபால டி சில்வா மீது முறைப்பாடு

editor

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவின் பிணை மனு நிராகரிப்பு – மீண்டும் விளக்கமறியல்

editor