அரசியல்உள்நாடு

மாணவி தற்கொலை விவகாரம் முறையாக ஆராயப்படவில்லை – சபையில் ஏற்றுக்கொண்டார் பிரதமர் ஹரிணி

தற்கொலை செய்துகொண்ட பாடசாலை மாணவியின் விவகாரத்தில் முதல் சம்பவம் இடம்பெற்றபோது அது முறையாக ஆராயப்படவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இந்த விடயம் குறித்தும், ஆசிரியர் தொடர்பிலும் ஏன் கல்வி அமைச்சுக்கு முறையாக அறிவிக்கவில்லை என்பது தொடர்பில் அந்த பாடசாலையின் அதிபரிடம் விளக்கம் கோர அமைச்சுக்கு முன்னிலையாகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகள் எடுக்கப்படும் என்று கல்வி அமைச்சரும், பிரதமருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (9) நடைபெற்ற அமர்வின்போது கொழும்பு பாடசாலையின் மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டமை மற்றும் நீதி கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆற்றிய விசேட உரையை தொடர்ந்து உரையாற்றுகையில் பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

கொழும்பு பாடசாலை மாணவி தற்கொலை செய்துகொண்டமை கவலைக்குரியது. இது உணர்வுபூர்வமானதொரு விடயமாகும்.

இவ்வாறான சம்பவங்களை எவருக்கும் குறிப்பாக பெற்றோருக்கு தாங்கிக்கொள்ள முடியாது. ஆகவே இவ்விடயம் குறித்து பேசுவதிலும், தலையிடுவதிலும் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.

இந்த விடயத்தை அரசியல் ரீதியானதொரு விடயமாக கருத கூடாது. 15 வயது சிறுமி பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை கருத்திற்கொள்ள வேண்டும். ஆகவே சமூகம் என்ற அடிப்படையில் அனைவரும் தோல்வியடைந்துள்ளோம்.

இதற்கு அனைவரும் பொறுப்புக்கூற வேண்டும். இவ்வாறான சம்வங்கள் இனியும் தோற்றம் பெறாத அளவுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த மாணவியின் விவகாரத்தில் முதல் சம்பவம் இடம்பெற்றபோது அது முறையாக ஆராயப்படவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த விடயம் குறித்து ஏன் கல்வி அமைச்சுக்கு அறிவிக்கவில்லை.

குறித்த ஆசிரியர் தொடர்பில் ஏன் அமைச்சுக்கு அறிவிக்கவில்லை என்பது தொடர்பில் அந்த பாடசாலையின் அதிபரிடம் விளக்கம் கோர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மகளிர் மற்றும் சிறுவர் பாதுகாப்பு அமைச்சருடன் இவ்விடயம் குறித்து கலந்துரையாடினேன்.

கல்வி அமைச்சு, மகளிர் மற்றும் சிறுவர் பாதுகாப்பு அமைச்சு , சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் பொலிஸ் பாதுகாப்பு திணைக்களம் ஒன்றிணைந்து ஒரு தொடர்பாடல் நிலையில் செயற்படுவதற்கான பொறிமுறை ஒன்றை வகுப்பது தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.

தற்கொலை செய்துகொண்ட மாணவியின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறான சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

-எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்

Related posts

முஸ்லிம் தனியார் சட்டத்தில் ரவூப் ஹக்கீம் கையொப்பம் இட வேண்டும் – இனாமுல்லாஹ்

முன்னாள் ஜனாதிபதி ரணில் மீது குற்றச்சாட்டு – டலஸ் ஜனாதிபதி அநுரவுக்கு கடிதம்

editor

ஜனாதிபதி மற்றும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சரிடையே சந்திப்பு!