உயிரை மாய்த்துக் கொண்ட கொட்டாஞ்சேனை பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி, பம்பலப்பிட்டியில் உள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்று வந்த காலப்பகுதியில் அந்த பாடசாலையின் ஆசிரியரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேகநபரான ஆசிரியர் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸாரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொட்டாஞ்சேனை கல்பொத்த வீதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்த தில்ஷி அம்ஷிகா என்ற 16 வயது மாணவி கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி 6வது மாடியில் இருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்டிருந்தார்.
பின்னர் மே 4 ஆம் திகதி மாணவியின் பெற்றோர், ஊடக சந்திப்பை நடத்தி, பாடசாலை ஆசிரியர் மற்றும் மேலதிக ஆசிரியரின் செயல்களே அவரது மரணத்திற்குக் காரணம் என்று குற்றம் சாட்டினர்.
அதன்படி, மாணவியின் மரணம் குறித்து நியாயமான விசாரணை நடத்தக் கோரி, கடந்த மே 8 ஆம் திகதி கொழும்பில் மூன்று இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
இந்தப் போராட்டங்கள் கொட்டாஞ்சேனை அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்திற்கு அருகிலும், பம்பலப்பிட்டியில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு அருகிலும், தனியார் வகுப்பு ஒன்றுக்கு அருகிலும் நடத்தப்பட்டன.
இது குறித்து பாராளுமன்றத்திலும் விவாதிக்கப்பட்டது.
இதற்கிடையில், சிறுமி உயிரிழந்தமை தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட தனியார் கல்வி நிலையத்தின் உரிமையாளர் நேற்று பிற்பகல் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு சென்று முறைப்பாடு அளித்திருந்தார்.
இந்த சம்பவம் குறித்த வழக்கு மே 19 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.