தற்போதைய அரசு எவ்வளவு தூரம் தமது சேவை பற்றி தெரிவித்துக் கொண்டாலும் ஆறுமாத காலத்தில் அவர்களது செல்வாக்கு வீழ்ச்சியடைந்துள்ளதாக முன்னாள் அமைச்சரும் கண்டி மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சட்டத்தரணி லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
கண்டியில் இடம் பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றிலே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் தமக்கு அதிக ஆதரவு கிடைத்திருப்பதாக அவர்கள் எவ்வளவு தூரம் புகழ் பாடினாலும், கடந்த தேர்தல் முடிவுகளின் படி அவர்கள் ஆறு மாத காலத்திற்கு முன் பெற்ற வாக்குகளைவிடவும் குறைந்த வாக்குகளையே பெற்றுள்ளனர்.
அதாவது அரசு கடந்த தேர்தலை விட இம் முறை சுமார் 23 இலட்சம் வாக்குகளால் வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த தேர்தலில் வாக்களித்த 23 இலட்சம் மக்கள் இம்முறை அவர்களுக்கு வாக்களிக்க தவறி உள்ளனர்.
ஆனால் ஐக்கிய மக்கள் சக்தி கடந்த தேர்தலை விட இம்முறை கூடுதல் வாக்குகளைப் பெற்றுள்ளமை குறிறிப்பிடத்தக்கது.
இந்த அடிப்படையில் பார்க்கும் போது மாகாண சபைத் தேர்தல் ஒன்று நடத்தப்பட்டால் அதில் தற்போதைய ஆட்சியாளர்கள் தோல்வி அடைவது நிச்சயம்.
எதிர் வரும் மாகாண சபைக்கு நாம் மிகவும் பலம் பொருந்திய ஒரு இளைஞரை முதலமைச்சராக்க திட்டமிட்டுள்ளோம்.
அதே நேரம் கண்டி மாநகர சபைக்கு பட்டியலில் உள்ளவர்கள் எமது கட்சியால் நியமிக்கப்பட உள்ளனர்.
எமது கட்சியில் தமது வட்டாரத்தில் தோல்வியடைந்தவர்கள் ஆனால் கூடுதல் வாக்குகள்பெற்றவர்கள் என்ற அடிப்டையில் முன்னுரிமை பட்டியல் தயாரிக்கப்படும்.
அந்த அடிப்டையில் அவ்விடங்கள் வழங்கப்படும். அதாவது தோல்வி அடைந்தவர்களில் அதிக வாக்குகள் பெற்றவர்கள் என்ற அடிப்படையில் அவர்கள் தெரிவு செய்யப்படுவார்கள் என்றார்.