மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் காத்தான்குடி பொலிஸ் உட்பட்ட புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் மின்கம்பம் ஒன்றுடன் அம்பியூலன்ஸ் வண்டி மோதியதில் மின்கம்பங்கள் துண்டு துண்டாக உடைந்து நொறுங்கியதுடன் அம்பியூலன்ஸ் வண்டி முற்றாக சேதமடைந்துள்ளது.
இதனால் மின்சாரம் குறித்த பிரதேசத்தில் துண்டிக்கப்பட்டுள்ளது.
குறித்த விபத்தில் சாரதி உட்பட உதவியாளர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பிலிருந்து நிந்தவூர் நோக்கி சென்று கொண்டிருந்த நிந்தவூர் ஆதார வைத்தியசாலைக்கு சொந்தமான குறித்த அம்பியூலன்ஸ் வண்டி பாதையை விட்டு விலகி மின்கம்பத்திலும், அருகில் இருந்த பனைமரத்திலும் மோதியுள்ளது.
சுகாதார அமைச்சின் சுகாதாரத் திணைக்களத்துக்கு கீழுள்ள கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்துக்கு சொந்தமான நிந்தவூர் ஆதார வைத்தியசாலைக்குரிய அம்பியூலன்ஸ் வண்டி சுமார் ரூ. 1 கோடி 75 இலட்சம் பெறுமதியானது குறிப்பிடத்தக்கது.
விபத்து தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
