தென் மாகாணத்தின் பல பகுதிகளுக்கு ஹேஷ் போதைப்பொருளை விநியோகித்த ஏழு சந்தேக நபர்களை மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்ட குற்றவியல் பிரிவினர் இன்று (5) கைது செய்தனர்.
ஹபராதுவ மற்றும் பத்தேகம பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனையின் போது அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
சந்தேகநபர்களிடமிருந்து சுமார் 4 கோடி ரூபாய் பெறுமதியான 5.6 கிலோ கிராம் ஹேஷ் போதைப்பொருளை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
மீன்பிடித்தல் என்ற போர்வையில் இந்த போதைப்பொருள் கடத்தலில் அவர்கள் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரரான மிதிகம ருவனின் உதவியாளரான மிதிகம ரணா உள்ளிட்ட ஏழு பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
மிதிகம ரணாவிடம் நடத்தப்பட்ட விசாரணைக்கு அமைய ஏனையோர் கைது செய்யப்பட்டனர்.
கடலில் மிதந்து கொண்டிருந்த போதைப்பொருள் தொகையை கரைக்கு கொண்டு வந்து விற்பனை செய்ததாக சந்தேக நபர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
தென் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் கித்சிறி ஜயலத்தின் அறிவுறுத்தலின் பேரில், மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்ட குற்றவியல் பிரிவின் பணிப்பாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் உதய குமார இந்த சம்பவம் குறித்து மேலதி விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்.