பொரளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹல்கஹகும்புற பகுதியில் நபர் ஒருவரை T56 வகை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளில் இருவர் சந்தேகநபர்களாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் மற்றும் பொரளை பொலிஸ் நிலைய அதிகாரிகள் இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் 2025.06.04 அன்று இடம்பெற்றிருந்த நிலையில், கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், இந்த குற்றச்செயலுக்கு உதவி புரிந்ததாக சந்தேகிக்கப்படும் இருவர், நேற்று (04) இரவு நேரத்தில் பொரளை சிரிசர உயன மற்றும் வெல்லம்பிட்டிய சேதவத்த பகுதிகளில் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட 18 மற்றும் 19 வயதுடைய சந்தேகநபர்கள், பொரளை மற்றும் வெல்லம்பிட்டிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபர்களில் ஒருவர் இந்த குற்றச்செயலுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளை ஓட்டியவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த குற்றச்செயல் தொடர்பாக இதுவரை ஆறு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.