மனித-வனவிலங்கு சகவாழ்வு தொடர்பில் பொட்ஸ்வானாவின் காபரோனில் 2026 ஜனவரி 19 முதல் 21 வரை நடைபெற்ற சர்வதேச பாராளுமன்ற மாநாட்டில் இலங்கையின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
இதில் பொட்ஸ்வானா, ஏனைய ஆபிரிக்க நாடுகள், ஐரோப்பிய ஒன்றியத்தின் சில நாடுகள் மற்றும் ஆசிய நாடுகள் உள்ளிட்ட 12 நாடுகளைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
காலநிலை மாற்றம், நிலப் பயன்பாட்டு அழுத்தம், வாழ்விட இழப்பு மற்றும் சனத்தொகை மாற்றங்கள் ஆகியவற்றால் தீவிரமடைந்து வரும் ஒரு சமூக-சுற்றுச்சூழல் சவாலான மனித-வனவிலங்கு மோதல்கள் குறித்து இந்த மூன்று நாள் சர்வதேச மாநாட்டில் கவனம் செலுத்தப்பட்டது.
மனிதர்களுக்கும் வனவிலங்குகளுக்கும் இடையில் நிலையான சகவாழ்வை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்ட கொள்கை அனுபவங்கள் மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர்கள், சிரேஷ்ட அரசாங்க அதிகாரிகள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், உள்ளூர் சமூகத் தலைவர்கள் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு நிபுணர்கள் இதில் ஒன்றிணைந்தனர்.
சுற்றாடல் கௌரவ பிரதி அமைச்சர் எண்டன் சரத் ஜயகொடி மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கின்ஸ் நெல்சன் ஆகியோர் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தியதுடன், குறிப்பாக மனித-யானை மோதல் சவாலை எதிர்கொள்வதில் இலங்கையின் தேசிய கண்ணோட்டங்கள் மற்றும் கொள்கை அனுபவங்களை அவர்கள் பகிர்ந்துகொண்டனர்.
2026 ஜனவரி 19 ஆம் திகதி, ‘மனித-வனவிலங்கு சகவாழ்வு: மோதலுக்கான முக்கிய தூண்டுதல்கள் மற்றும் காரணிகள்’ என்ற அமர்வில் கௌரவ பிரதி அமைச்சர் எண்டன் சரத் ஜயகொடி உரையாற்றினார்.
இதன்போது, மனித-யானை மோதலை முகாமைத்துவம் செய்வதில் இலங்கையின் விரிவான அனுபவத்தை விவரித்த அவர், எதிர்வினையாற்றும் குறுகிய கால தீர்வுகளில் இருந்து விரிவான மற்றும் முன்னோக்கிய கொள்கை மற்றும் சட்ட ரீதியான தீர்வுகளுக்கு மாற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
வனவிலங்குப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் அதேவேளை, மோதல்களைக் குறைப்பதற்கான ஒரு நிலையான அணுகுமுறையாக நிர்வகிக்கப்பட்ட யானை வலயங்கள் மற்றும் செறிவூட்டப்பட்ட வலயங்களை நிறுவுவதற்கான இலங்கையின் முயற்சிகளை அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், ஆராய்ச்சி அடிப்படையிலான கொள்கை மேம்பாடு, தொழில்நுட்ப புத்தாக்கம் மற்றும் இது போன்ற சவால்களை எதிர்கொள்ளும் ஆசிய நாடுகளுக்கு இடையிலான சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.
2026 ஜனவரி 20 ஆம் திகதி, ‘மனித நடவடிக்கைகளில் வனவிலங்கு தாக்க முகாமைத்துவம்: சமூகம் சார்ந்த இயற்கை வள முகாமைத்துவ மற்றும் நலப்பகிர்வு மாதிரிகள்’ என்ற அமர்வில் கௌரவ கின்ஸ் நெல்சன் உரையாற்றினார்.
இலங்கையில், குறிப்பாக மனித-யானை மோதலினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள கிராமப்புற சமூகங்கள் எதிர்கொள்ளும் யதார்த்தங்கள் குறித்து அவரது உரையில் கவனம் செலுத்தப்பட்டது.
மனிதர்களுக்கும் வனவிலங்குகளுக்கும் இடையில் வெற்றிகரமான சகவாழ்வை அடைவதற்கு அர்த்தமுள்ள சமூகப் பங்களிப்பு, நியாயமான நலப்பகிர்வு மற்றும் வாழ்வாதாரப் பாதுகாப்பு ஆகியவை அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.
பாதிக்கப்பட்ட சமூகங்களின் சமூக-பொருளாதாரத் தேவைகளுடன் பாதுகாப்பு நோக்கங்களை சமநிலைப்படுத்தும், சமூகத்தை மையமாகக் கொண்ட கொள்கைகள், உள்ளூர் ஆட்சி பொறிமுறைகள் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி முயற்சிகளை வலுப்படுத்துவதில் பாராளுமன்ற உறுப்பினர்களின் முக்கிய பங்கை அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தக் கலந்துரையாடல்களில், செயலூக்கமான கொள்கை மற்றும் சட்டங்கள், சமூக வலுவூட்டல், இழப்பீடு மற்றும் காப்பீட்டு பொறிமுறைகள் ஊடான பொருளாதார பாதுகாப்பு மற்றும் வனவிலங்கு நிர்வாகத்தில் நவீன தொழில்நுட்பம் மற்றும் தரவு சார்ந்த தீர்வுகளைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தப்பட்டது.
கொள்கை புத்தாக்கம் மற்றும் சமூக ஈடுபாட்டின் மூலம் மனித-யானை மோதலைத் தீர்ப்பதில் இலங்கையின் அனுபவங்கள் சர்வதேச பாராளுமன்ற உரையாடலுக்கு வழங்கப்பட்ட பெறுமதிமிக்க பங்களிப்புகளாக அங்கீகரிக்கப்பட்டன.
மனித-வனவிலங்கு சகவாழ்வு குறித்த சர்வதேச பாராளுமன்ற மாநாடு 2026 ஜனவரி 21 ஆம் திகதி நிறைவடைந்தது.
நிலையான மற்றும் அமைதியான மனித-வனவிலங்கு சகவாழ்வை மேம்படுத்துவதில் சட்டமன்றங்களின் பங்கை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட முக்கிய பாராளுமன்ற பரிந்துரைகள் இதன்போது ஏற்றுக்கொள்ளப்பட்டன.
