Erskine May, Kaul & Shakdher போன்றவற்றில் பாராளுமன்ற சம்பிரதாயங்கள் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளன.
நிறைவேற்று அதிகாரத்தை செயற்படுத்தும் பிரதி அமைச்சர் ஒருவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை கொண்டுவருவதானது வெஸ்மினிஸ்டர் முறைமையாகும்.
பிரதி அமைச்சர் ஒருவர் நிறைவேற்று அதிகாரத்தின் ஒரு தரப்பாக மாறும்போது, நிலையியற் கட்டளைகளில் அது குறிப்பிடப்படவில்லை என்ற காரணத்திற்காக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவருவதை நிராகரிக்க முடியாது.
நிலையியற் கட்டளைகளில் அமைச்சர்களுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானங்கள் குறித்து தெளிவான குறிப்புகள் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
இதனைக் கொண்டு மாத்திரம் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவர முடியாது என்று உங்களால் தெரிவிக்க முடியாது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
அரசியலமைப்பின் 46 (1) ஆவது பிரிவின்படி, பிரதி அமைச்சர் நிறைவேற்று அதிகாரங்களைப் பயன்படுத்துவதால், இதுபோன்ற நம்பிக்கையில்லாப் பிரேரணைகளைக் கொண்டுவருவது சம்பிரதாயமாகும்.
இது வெஸ்ட்மின்ஸ்டர் சம்பிரதாயமாகும். குறிப்பாக, அரசியலமைப்பின் பிரிவு 45(3) இன் கீழ், பரந்த அரசியலமைப்பு சட்டகத்தின் மூலம் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை கொண்டு வருவதற்கான சந்தர்ப்பம் காணப்படுகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்ற நடைமுறைகள் தொடர்பான முன்னுதாரணங்களை சபாநாயகர் பரிசீலனை செய்திருப்பாராக இருந்தால், பிரதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வர முடியும்.
சட்டமா அதிபரின் ஆலோசனையையும் செயலாளர் குழுவினால் வழங்கப்பட்ட அறிக்கையையும் இந்த சபையில் சமர்ப்பியுங்கள்.
இவற்றை பரிசீலித்து எதிர்க்கட்சியின் கருத்தை சபையில் முன்வைக்க சந்தர்ப்பமளியுங்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (10) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
