அரசியல்உள்நாடு

பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் மகன் ரசிக விதானவுக்கு விளக்கமறியல்

ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் மகன் ரசிக விதானவை ஆகஸ்ட் 01ஆம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு மத்துகம நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இன்று (20) அவர் மத்துகம நீதவான் அசங்க ஹெட்டியாவத்த முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே நீதவான் மேற்படி உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

போலி தரவுகளுடன் பதிவு செய்யப்பட்ட ஜீப் வண்டி ஒன்று தொடர்பாக பதில் பொலிஸ்மா அதிபருக்கு கிடைத்த இரகசிய தகவலைத் தொடர்ந்து, வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவு கடந்த 4 மாதங்களாக விசாரணைகளை முன்னெடுத்திருந்தது.

இதற்கமைய அந்த வாகனம் மத்துகம நகரில் பயணிப்பதாக கிடைத்த ரகசிய தகவலைத் தொடர்ந்து, வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவு நேற்று மாலை அந்தப் பகுதியில் விசேட தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்து ஜீப் வண்டியை செலுத்திய சந்தேக நபரைக் கைது செய்தது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் மகன் ரசிக விதான என்பதுடன், அவரும் ஜீப் வண்டியும் தற்போது மத்துகம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

குறித்த ஜீப் வண்டி தொடர்பில் முன்னெடுத்த விசாரணையில், அது சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டு, தவறான தரவுகளைச் சமர்ப்பித்து மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளமை தெரியவந்தது.

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தை சேர்ந்த ஒருவர் இந்த சட்டவிரோத செயலுக்கு உதவியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

ஜகத் விதானவுக்குச் சொந்தமான தனியார் நிறுவனத்தின் பெயரில் இரண்டாவது முறையாக பதிவு செய்யப்பட்டுள்ள இந்த ஜீப் வண்டியை அவரது மகன் பயன்படுத்தியுள்ளார் என்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

விசாரணையின் போது, கைது செய்யப்பட்ட ரசிக விதான, பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் ரோசெல் மெலனி அபேகுணவர்தனவிடமிருந்து ஜீப் வண்டியை கொள்வனவு செய்துள்ளதாக கூறியுள்ளார்.

அந்த வாக்குமூலத்தின்படி, நேற்று (19) மாலை களுத்துறை, நாகொடவில் உள்ள ரோசெல் மெலனி அபேகுணவர்தனவின் வீட்டிற்கு பொலிஸார் சென்றதாகவும், ஆனால் அவரும் அவரது கணவரும் அங்கு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கைது செய்யப்பட்ட ரசிக விதான இன்று மத்துகம நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

Related posts

ஊரடங்கு வேளையில் அதிகரிக்கும் சிறுவர் துஷ்பிரயோகம்

பெண் ஒருவரின் சடலம் மீட்பு!

editor

யாழ் மாவட்டத்தில் குறைக்கப்படாத உணவுகளின் விலை – பொதுமக்கள் விசனம்