பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு குறித்து பொலிஸ் மா அதிபருடன் முன்னர் கலந்துரையாடியபோது, 22 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதை அவர் உறுதிப்படுத்தியதாக ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான் கூறியுள்ளார்.
அதன்படி, இந்த 22 எம்.பி.க்களுக்கும் பாதுகாப்பு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அவர்கள் தங்கள் சொந்த பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் குறைந்தபட்சம் இந்த 22 பேரின் பெயர்களையாவது வெளியிடுமாறு முஜிபுர் கேட்டுக் கொண்டார்.
கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட 22 பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை உடனடியாக வெளியிடுமாறு தானும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் நேற்று (18) சபாநாயகரை சந்தித்து கோரிக்கை விடுத்ததாகவும் அவர் கூறினார்.
கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் வெளியிடப்படாததால், அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் யார் என்பதை சரியாக அறிந்து கொள்ள முடியாது என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.
தனக்கு வந்த அச்சுறுத்தல்கள் குறித்து பொலிஸாருக்குப் முறைப்பாடு அளித்திருந்தாலும், இன்றுவரை தனக்கு பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மேலும் தெரிவித்தார்.
