உள்நாடு

பணிப்புறக்கணிப்பு தொடர்பில் இ.போ.ச. பேருந்து சாரதிகள் அதிரடி அறிவிப்பு

காரைநகர் இலங்கை போக்குவரத்து சபை (SLTB) பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துநர்கள், பாதுகாப்பு காரணங்களை முன்வைத்து, நாளை (19) பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

நேற்று (17) யாழ்ப்பாணத்தில் இருந்து மாலை 6:00 மணிக்கு புறப்பட்ட 782 வழித்தட பேருந்தை மூளாய் சந்தியில் வழிமறித்த தனியார் பேருந்து சாரதியொருவர், பேருந்துக்குள் புகுந்து சாரதி மற்றும் நடத்துநர் ஆகியோரை கடுமையாக தாக்கியதன் காரணமாக இப்பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தாக்குதலில் சாரதிக்கு இரும்பு கம்பியால் தலையில் காயம் ஏற்பட்டதை அடுத்து, அவர் முதலில் வலந்தலை பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் 24வது விடுதியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

நடத்துநரும் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

வட்டுக்கோட்டை பொலிஸார் இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும், சந்தேக நபரை கைதுசெய்ய இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அவர் தற்போது தலைமறைவாக இருப்பதாகவும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இருப்பினும், பாதிக்கப்பட்டவர்கள், வட்டுக்கோட்டை பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், சந்தேக நபரை இன்னும் கைதுசெய்யவில்லை எனவும் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதனால், பாதுகாப்பு உறுதி செய்யப்படும் வரை, காரைநகர் SLTB சாலை ஊழியர்கள் நாளை முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர்.

Related posts

பால் மாவுக்கான இறக்குமதி வரி அதிகரிப்பு!

உயர் தர பரீட்சை பெறுபேறுகள் வௌியாகின்றது!

இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும்

editor