உலகம்

பணயக்கைதிகள் பரிமாற்றம் இன்று – காசா போர் முடிவுக்கு வந்தது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தார்

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள தற்காலிகப் போர்நிறுத்தம் தொடரும் நிலையில், பணயக்கைதிகள் பரிமாற்றம் இன்று (13) நடைபெறவுள்ளது.

இதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், காசா போர் “முடிவுக்கு வந்தது” என அறிவித்துள்ளார்.

காசாவில் ஹமாஸ் அமைப்பினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள 20 இஸ்ரேலியப் பணயக்கைதிகளுக்குப் பதிலாக, இஸ்ரேலிய சிறைகளில் உள்ள சுமார் 2,000 பலஸ்தீனியக் கைதிகள் பரிமாற்றம் செய்யப்படவுள்ளனர்.

இந்த 2,000 பலஸ்தீனியக் கைதிகளில், காசாவிலிருந்து கைது செய்யப்பட்ட சுமார் 1,700 பேர் பலாத்காரமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களாக ஐ.நா. கருதுகின்றது.

மேலும், சுமார் 250 பேர் ஆயுள் தண்டனை அல்லது நீண்ட காலச் சிறைத் தண்டனையை அனுபவித்து வருபவர்கள் ஆவர்.

அந்த வகையில் ஹமாஸ் அமைப்பிடம் மீதமாகவுள்ள 20 இஸ்ரேலியப் பணயக்கைதிகளும் இன்று காலை (உள்ளூர் நேரம் 8:00 – 10:00 மணிக்குள்) இஸ்ரேலியப் படைகளிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன், 2023 ஒக்டோபர் 07 தாக்குதலின் போது கொல்லப்பட்ட நூற்றுக் கணக்கான பணயக்கைதிகளின் உடல்களும் இன்று ஒப்படைக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ட்ரம்ப் மத்திய கிழக்கு விஜயம்
போர்நிறுத்த ஒப்பந்தத்தின் பின்னணியில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பயணமாகியுள்ளார்.

அவர் இஸ்ரேலிய நாடாளுமன்றமான நெசெட்டில் உரையாற்றவுள்ளதோடு, இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்த உச்சிமாநாட்டிற்கு எகிப்தில் அவர் தலைமை தாங்குவார்.

இதேவேளை, “காசாவில் போர் முடிந்துவிட்டது” என்று அவர் மத்திய கிழக்குக்குச் செல்லும் வழியில் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளர்.

இந்தப் பேச்சுவார்த்தையின் வெற்றியால் அவர் மிகுந்த நம்பிக்கையுடன் காணப்படுகிறார்.

காசாவின் நிலைமை
கடுமையான போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு காசாவில் உள்ள தங்கள் வீடுகளுக்கு பலஸ்தீனியர்கள் மீண்டும் திரும்பத் தொடங்கியுள்ளனர்.

எனினும், அங்கு தங்கள் வீடுகளின் இடிபாடுகளையெ அவர்களால் காணக்கூடியதாக இருக்கின்றது.

தேவையான மனிதாபிமான உதவிகள் மெதுவாக காசா பகுதிக்குள் நுழையத் தொடங்கியுள்ள போதிலும், உணவு, மருந்துகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்குத் தொடர்ந்து கடுமையான பற்றாக்குறை நிலவுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இரண்டு வருடங்கள் நீடித்த இஸ்ரேலின் இந்த காசா மீதான போரில் குறைந்தது 67,806 பேர் கொல்லப்பட்டுள்ளதோடு, 170,066 பேர் காயமடைந்துள்ளனர்.

Related posts

பாகிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

கனடாவும் இரத்து செய்தது

ரஷ்ய பிரதமருக்கு கொரோனா தொற்று உறுதி