நுவரெலியாவிற்குள் பிரவேசிக்கும் பல வீதிகள் வழமைக்குத் திரும்பியுள்ளதாக நுவரெலியா மாவட்டச் செயலாளர் துஷாரி தென்னகோன் தெரிவித்துள்ளார்.
நுவரெலியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அதற்கமைய, மஹியங்கனையிலிருந்து நுவரெலியா வரையிலான வீதி, போக்குவரத்திற்காக முழுமையாகத் திறக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
நுவரெலியாவிலிருந்து கினிகத்தேன ஊடாக கொழும்பு செல்லும் வீதியும், நுவரெலியாவிலிருந்து பெகவந்தலாவ ஊடாக கொழும்பு செல்லும் வீதியும் தற்போது போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலாளர் இங்கு குறிப்பிட்டார்.
மேலும், ரேந்தபொல ஊடாக வெலிமடை – பண்டாரவளை வீதி மற்றும் உடபுஸ்ஸல்லாவ வீதி என்பனவற்றையும் தற்போது திறக்க முடிந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
நுவரெலியா – கண்டி பிரதான வீதியின் இறம்பொடை பகுதியில் வீதி புனரமைப்புப் பணிகள் இடம்பெற்று வருவதாகவும், அதனைத் திறப்பதற்கு இன்னும் சில நாட்கள் செல்லும் எனவும் மாவட்டச் செயலாளர் கூறினார்.
புகையிரத வீதிகளைச் சீரமைக்கும் பணிகள் புகையிரதத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படுவதாகவும், தற்போது திறக்கப்பட்டுள்ள வீதிகளில் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்துகளை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் செயலாளர் தெரிவித்தார்.
