புனரமைப்பு பணிகள் காரணமாக தற்காலிகமாக செயலிழந்திருந்த நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் அனைத்து மின் உற்பத்தி இயந்திரங்களும் மீண்டும் வழமைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.
இதற்கமைய, மூன்று மின் உற்பத்தி இயந்திரங்களும் தற்போது தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளதாக லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இதன் மூலம் 900 மெகாவொட் மின்சாரம் தேசிய மின் தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த நவம்பர் 03 ஆம் திகதி சாதாரண பராமரிப்புப் பணி காரணமாக லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தின் ஒரு இயந்திரம் நிறுத்தப்பட்டதுடன், டிசம்பர் 20 ஆம் திகதி ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக மற்றுமொரு இயந்திரமும் செயலிழந்தது.
தற்போது அந்த இரண்டு இயந்திரங்களும் புனரமைப்புப் பணிகளின் பின்னர் மீண்டும் முழுமையாகச் செயற்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.
