அரசியல்உள்நாடு

நிலக்கரிகளின் தரம் பற்றிய அறிக்கையை வழங்கவும்

மின் உற்பத்திக்காக இந்நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி தொடர்பில் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கேள்வியெழுப்பப்பட்டது.

உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் அவர்களின் தலைமையில் அண்மையில் கூடியபோதே இது பற்றிக் கலந்துரையாடப்பட்டது.

இக்குழுக் கூட்டத்திற்கு வலுசக்தி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் வரையறுக்கப்பட்ட லங்கா நிலக்கரி (தனியார்) நிறுவனத்தின் அதிகாரிகள் அழைக்கப்பட்டிருந்தனர்.

நிலக்கரி இறக்குமதி செய்யப்படும் நடைமுறை குறித்து அதிகாரிகளிடம் விளக்கம் கோரிய குழு, இறுதியாக நிலக்கரி இறக்குமதி செய்யும்போது கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறை குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தது.

அத்துடன், இறுதியாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியின் தரத்தில் ஏதேனும் சிக்கல்கள் உள்ளதா எனக் குழுவின் தலைவர் அதிகாரிகளிடம் வினவினார்.

நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி கப்பல்களில் காணப்பட்ட நிலக்கரிகளின் மாதிரிகளின் தரங்கள் பரிசோதனைக்காக இந்தியாவுக்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும், இவற்றின் அறிக்கைகள் கிடைக்கப்பெற்ற பின்னர் அவை தொடர்பில் சரியான தகவல்களை வழங்க முடியும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவ்விடயம் குறித்து நீண்டநேரம் கலந்துரையாடப்பட்டதுடன், இந்த நிலக்கரி இருப்புக்களை இறக்குமதி செய்யும் செயற்பாட்டுடன் தொடர்புபட்ட வரையறுக்கப்பட்ட லங்கா நிரக்கரி (தனியார்) நிறுவனத்தின் முன்னாள் தலைவரை அடுத்த குழுக் கூட்டத்திற்கு அழைக்கவிருப்பதாக இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர் குறிப்பிட்டார்.

அதேநேரம், குறித்த குழுக் கூட்டத்தின் போது இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட மூன்று நிலக்கரி கப்பல்களில் காணப்பட்ட நிலக்கரிகளின் தரம் குறித்த அறிக்கைகளையும், கடைசியாக வந்த கப்பலில் உள்ள நிலக்கரியின் தரம் தொடர்பில் இலங்கையில் நடத்தப்பட்ட ஆய்வக அறிக்கைகளையும் குழுவிற்கு வழங்குமாறும் குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.

இந்தக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான அஜித்.பி பெரேரா மற்றும் சத்துர கலப்பதி ஆகியோர் கலந்துகொண்டனர்.

Related posts

பங்கு சந்தையின் நடவடிக்கைகள் இடை நிறுத்தம்

UNP கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் கைது

ஐயாயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை இன்றுடன் நிறைவு