கொட்டகலை, பத்தனை சந்தியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் மீது லொறி மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளதுடன், மற்றொருவர் கடும் காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில், பத்தனை சந்தியில் இன்று காலை சுமார் 6.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் லிந்துலை, கவ்லினா பகுதியைச் சேர்ந்த 21 வயது மதிக்கத்தக்க பதுர்தீன் மொஹமட் அப்துல் ரஹீம் என்ற நபரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
டயகம பகுதியிலிருந்து இன்று காலை 4.45 மணியளவில் புறப்பட்டு, பத்தனை ஊடாக கண்டி நோக்கிச் சென்றுகொண்டிருந்த, இலங்கை போக்குவரத்து சபையின் நாவலப்பிட்டி டிப்போவுக்குச் சொந்தமான பஸ், தேநீர் அருந்துவதற்காக நிறுத்தப்பட்டிருந்த வேளையிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
குறித்த பஸ் வழமையாக இவ்விடத்தில் நிறுத்தப்படுவதாகவும், அவ்வேளையில் ஹட்டன் பகுதியிலிருந்து வந்த லொறி, பஸ் மீது மோதியதுடன் அங்கு நின்றிருந்தவர்கள் மீதும் மோதியதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இவ்விபத்தில் லொறிக்கோ அல்லது பஸ்ஸுக்கோ பாரிய சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை.
சம்பவத்தில் கடும் காயங்களுக்கு உள்ளான இருவர் கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மற்றவர் மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியர் ஒருவர் தெரிவித்தார்.
காயமடைந்தவர் பத்தனை, பெய்திலி பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்த நபர், நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது சகோதரியைப் பார்வையிடுவதற்காகச் சென்ற போதே இந்த விபத்திற்கு முகங்கொடுத்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக பஸ் மற்றும் லொறி சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பஸ்ஸினை பாதுகாப்பின்றி நிறுத்தியமைக்காக பஸ் சாரதிக்கு எதிராகவும், விபத்தினைத் தவிர்க்காமைக்காக லொறி சாரதிக்கு எதிராகவும் வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புள்ள – பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
-சுந்தரலிங்கம்
