நியாயமான சிந்தனையுடன் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கும் ஒரு ஜனாதிபதி நாட்டில் ஆட்சிக்கு வந்தால் அந்த அரசாங்கத்தின் பிரதமராக தாம் செயற்பட தயார் என யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் தமிழ் இனத்தின் வலிகளைப் புரிந்து கொண்டு உண்மையாக தமிழர்கள் சார்பில் சிந்தித்து இனப்பிரச்சினையை தீர்க்கும் ஒரு ஜனாதிபதி ஆட்சிக்கு வந்தால் அந்த அரசாங்கத்தின் பிரதமராக தாம் பதவி வகிப்பதாகவும் அர்ச்சுனா எம். பி தெரிவித்துள்ளார்.
அவ்வாறு இடம்பெற வேண்டும் என்பதே தமது அவாவாக இருந்தாலும் அப்படி ஒன்று இந்த நாட்டில் நடைபெறப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு அவர் இன்று (04) வழங்கிய பேட்டி நிகழ்ச்சியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர்,
”நாமல் ராஜபக்ஷ தான் அடுத்த ஜனாதிபதியாக வருவார் என சில தரப்பினர் தெரிவித்து வருகின்றார்கள்.
அத்துடன் நாமலுடன் நான் இணைந்துவிட்டதாகவும் கருத்துக்கள் பரவலாக வெளி வருகின்றன.
அவ்வாறில்லை, நாமல் தமிழ் இனத்தின் எதிரி, அவருடைய அரசியல் நடவடிக்கைகள் தமிழர்களுக்கு சார்பானதாக ஒருபோதும் அமையாது.
அவ்வாறு நான் அவருடன் இணைந்தால் அது நான் எனது இனத்துக்கும் எனது தந்தைக்கும் செய்யும் பாரிய துரோகமாகும்.
மேலும், நாட்டில் தற்போதைய நிலையில் எதிர்க்கட்சி ஆட்சிக்கு வருமானால், அந்த அரசாங்கத்தில் சுகாதார அமைச்சுப் பதவியை எனக்கு வழங்குவதற்கும் தயாராக உள்ள நிலைமை காணப்படுவதாகவும்” அவர் தெரிவித்துள்ளார்.