அரசியல்உள்நாடு

தோல்வியடைந்த சபைகளில் நிழல் அரசை உருவாக்க திசைகாட்டியினர் முயற்சி – பிரஜா சக்தி மீது பாரிய குற்றச்சாட்டு

தேசிய மக்கள் சக்தி தோல்வியடைந்த உள்ளூராட்சி சபைகளில் நிழல் அரசாங்கம் ஒன்றை கொண்டு வர துடிப்பதே ‘பிரஜா சக்தி’ திட்டத்தின் உண்மையான நோக்கம் என, நாவிதன்வெளி பிரதேச சபையின் புதிய ஆண்டிற்கான முதலாவது அமர்வில் பிரதேச சபை உறுப்பினர்கள் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன் தலைமையில் நடைபெற்ற குறித்த கூட்டத்தொடரில், பிரஜா சக்தி தொடர்பான பிரேரணை முன்வைக்கப்பட்டு அதனைச் சுற்றி நீண்ட வாத–பிரதிவாதங்கள் இடம்பெற்றன.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பிரதேச மட்டத்தில் நிழல் அரசாங்கம் ஒன்றை செயற்படுத்தி வருவதாக குற்றம் சாட்டி, பிரதேச சபை உறுப்பினர் எம்.வி. நவாஸ் அவர்களால் பிரேரணை முன்வைக்கப்பட்டது.

அவர் கருத்து தெரிவிக்கையில், நாவிதன்வெளி பிரதேசத்தின் 20 கிராம சேவகர் பிரிவுகளிலும் பிரஜா சக்தி குழுக்கள் தெரிவு செய்யப்பட்டு, உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மக்களால் தோற்கடிக்கப்பட்ட தேசிய மக்கள் சக்தியினரே அந்த குழுக்களின் தலைவர்களாக நியமிக்கப்படுகின்றமை வேதனைக்குரிய விடயமாகும் என சுட்டிக்காட்டினார்.

மேலும், பிரதேச செயலாளர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம சேவகர்கள் வெறும் பார்வையாளர்களாக மாற்றப்பட்டுள்ள நிலையில், தேர்தலில் நிராகரிக்கப்பட்டவர்கள் அதிகாரிகளுக்கு கட்டளையிட்டு, நிழல் பிரஜா சக்தி தவிசாளரின் கீழ் அரசியல் செயற்பாடுகளையும் கட்சி வளர்ப்பையும் மேற்கொண்டு வருகின்றார்களா எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

இதனைத் தொடர்ந்து பிரஜா சக்தி தொடர்பான விவாதம் சபையில் தீவிரமடைந்தது. சுயேட்சை குழு உறுப்பினர் அ. நளீர் கருத்து தெரிவிக்கையில்,

“பிரஜா சக்தி உறுப்பினர்கள் ஜனாதிபதி பதவி கிடைத்தது போன்று நடந்து கொள்கின்றனர். பிரதேச செயலாளருக்கே வேலை சொல்லும் அளவிற்கு பிரஜா சக்தி தலைவர்கள் செயற்படுகின்றனர். நாங்கள் அபிவிருத்திக்கு எதிரானவர்கள் அல்ல.

ஆனால் மக்கள் ஆணை பெற்ற கௌரவ உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்தே செயற்பட வேண்டும்.

வீட்டுத் திட்டமாக இருந்தாலும், மலசலகூடத் திட்டமாக இருந்தாலும் அடிக்கல் நாட்டுவது தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்களும் கட்சி சார்ந்தவர்களுமே பங்கேற்க வேண்டும் என்ற நடைமுறை கடந்த கால எந்த ஆட்சியிலும் காணப்படவில்லை” என சுட்டிக்காட்டினார்.

சபை உறுப்பினர் சோ. கமலேஸ்வரன், “பிரஜா சக்தி என்பது பிச்சை எடுக்கும் சக்தியாகவே காணப்படுகிறது.

அடுத்த கட்ட அரசியலுக்காக தேசிய மக்கள் சக்தி காய்களை நகர்த்துகிறது.

பிரஜா சக்தி திட்டத்தில் அரசை பிரதிநிதித்துவப்படுத்துவர்கள் மட்டுமே அங்கத்துவம் பெற முடியுமா?” என கேள்வி எழுப்பினார்.

இதன்போது உறுப்பினர் கோ. உதயகுமார், “நாவிதன்வெளி பிரதேச சபைக்குட்பட்ட மத்திய முகாம் 3 பகுதியில் தமிழ், முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர்.

ஆனால் வெறும் ஆறு குடும்பங்கள் மட்டுமே வாழும் சிங்களப் பகுதியில் இருந்து ஒருவரை பிரஜா சக்தி தலைவராக தெரிவு செய்துள்ளமை முறைகேடானது” என சுட்டிக்காட்டினார்.

இதற்கு பதிலளித்த தேசிய மக்கள் சக்தி பிரதேச சபை உறுப்பினர் கு. நிரோஜன், “கடந்த காலங்களில் அரசாங்க நிதிகள் கட்சி காரியாலயங்களுக்கே பயன்படுத்தப்பட்டுள்ளன.

ஆனால் பிரஜா சக்தி நாவிதன்வெளியில் மட்டுமல்ல, நாடு முழுவதும் வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளிப்படுத்தப்பட்டு, பிரதேச செயலகங்களின் ஊடாக செயல்படுத்தப்படுகிறது.

கடந்த கால அரசியல்வாதிகள் வேலை தருவதாகவும், காணி தருவதாகவும் மக்களை ஏமாற்றியுள்ளனர்.

பிரஜா சக்தியின் நோக்கம் அரசுத் தரப்புடன் மட்டுமன்றி அனைத்து தரப்பினரையும் இணைத்துக் கொண்டு, அரசு கொண்டு வரும் அனைத்து திட்டங்களும் பாதிக்கப்பட்ட மக்களிடம் சென்றடையச் செய்வதே” என விளக்கினார்.

இதனைத் தொடர்ந்து குறித்த பிரேரணை வாக்கெடுப்பிற்கு விடப்பட்டபோது, தேசிய மக்கள் சக்தி உறுப்பினரைத் தவிர்ந்த ஏனைய அனைத்து உறுப்பினர்களும் அதனை எதிர்த்து வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது.

-அம்பாறை நிருபர் நூருல் ஹுதா உமர்

Related posts

லிட்ரோ கேஸ் நிறுவனத் தலைவர் பதவி நீக்கம்

தொடர்ந்தும் 6 மாவட்டங்களுக்கு ஊரடங்கு சட்டம் நீடிப்பு

பணம் கொடுத்து வாக்காளர் அட்டைகளை பெற முயன்ற இருவர் கைது