உள்நாடு

தொடர் மழை காரணமாக, மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து, மத்திய மலைநாட்டில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.

நீர்ப்பாசன பிரதேசங்களில் பெய்யும் தொடர் மழை காரணமாக, மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஒரு வான்கதவு இன்று (25) காலை முதல் திறக்கப்பட்டுள்ளது.

இதனால், நீர்த்தேக்கத்திற்குக் கீழ் தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும் என, நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான பொறியியலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தத் தொடர் மழை காரணமாக, மக்களின் இயல்புவாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அடைமழை பெய்து வருவதால், பல இடங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், மலைகள், மண்மேடுகள் அருகே வாழும் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என, இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதேவேளை, சீரற்ற காலநிலை காரணமாக, ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியிலும் ஹட்டன்-நுவரெலியா பிரதான வீதியிலும் சில இடங்களில் மண்திட்டுக்கள் சரிந்துள்ளன. இந்த வீதிகளைப் பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் தங்கள் வாகனங்களை ஓட்ட வேண்டும் என, போக்குவரத்து பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

மேலும், மழையுடன் இடை இடையே ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில் கலுகல, பிட்டவல, கினிகத்தேனை, கடவல, தியகல, வட்டவளை, ஹட்டன் ஆகிய பகுதிகளிலும், ஹட்டன்-நுவரெலியா வீதியில் குடாகம, கொட்டகலை, சென்கிளையார், தலவாக்கலை, ரதல்ல, நானுஓயா ஆகிய பகுதிகளிலும் அடிக்கடி பனிமூட்டம் காணப்படுகிறது.

வளைவுகள் நிறைந்த இந்த வீதிகளில், தங்களுக்கு உரிய பக்கத்தில் முகப்பு விளக்குகளை ஒளிரச் செய்து, அவதானமாக வாகனம் ஓட்டுவதன் மூலம் விபத்துகளைத் தவிர்க்கலாம் என, வீதி போக்குவரத்து பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நீர்ப்பாசன பிரதேசங்களில் அதிக மழைவீழ்ச்சி கிடைப்பதால், காசல்ரி, கெனியோன், விமலசுரேந்திர, லக்ஸபான, நவலக்ஸபான, மவுசாக்கலை, பொல்பிட்டிய ஆகிய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் சடுதியாக உயர்ந்து வருகின்றன.

எனவே, இந்நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் எவ்வேளையிலும் திறக்கப்படலாம் என்பதால், குறித்த நீர்த்தேக்கங்களுக்குக் கீழ்ப்பகுதியில் வாழும் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

நீர்த்தேக்கங்களுக்கு கிடைக்கும் நீரைப் பயன்படுத்தி, உச்ச அளவு நீர்மின் உற்பத்தி இடம்பெற்று வருவதாக இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

-சுந்தரலிங்கம்

Related posts

சுற்றுலா செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்

சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு ஜனாதிபதியுடன் மீள பேச்சுவார்த்தை

“எரிபொருள் விலை உயர்வுக்கு கச்சா எண்ணெய் விலை உயர்வு மட்டும் காரணமல்ல”