தையிட்டி விகாரை பிரச்சினைக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்ட விரோத விகாரை தொடர்பிலான பிரச்சனை தொடர்பில் நேரில் ஆராய்வதற்காக, கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் யாழ். மாவட்ட செயலர் ம. பிரதீபன் ஆகியோர் நேற்று (17) மாலை எவருக்கும் அறிவிக்காது இரகசியமான முறையில் சென்றுள்ளனர்.
அந்நிலையில், வலி. வடக்கு பிரதேச சபையின் மாதாந்த கூட்டம் நிறைவு பெற்ற பின்னர், தவிசாளர் தலைமையில் உறுப்பினர்கள் சிலரும் விகாரைக்கு சென்று இருந்தனர்.
அவ்வேளை அங்கு கடற்றொழில் அமைச்சர் மற்றும் மாவட்ட செயலர் ஆகியோர் அங்கு நின்றிருந்தனர். அமைச்சர் குழாம் அங்கு வருகை தருவது தொடர்பில் தமக்கு எதுவும் அறிவிக்காது இரகசியமாக வந்தமை தொடர்பில் பிரதேச சபை உறுப்பினர்கள் விசனம் தெரிவித்தனர்.
அதேவேளை அங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், தையிட்டி விகாரை பிரச்சினைக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.