உள்நாடு

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசிதவின் வாகனம் மீது துப்பாக்கிச் சூடு – சி.சி.டி.வி ஊடாக விசாரணை

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லோலுவவின் வாகனம் மீது நேற்று இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் சி.சி.டி.வி காட்சிகளை ஆராய்ந்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு மற்றும் நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலைத்தை சேர்ந்த நான்கு குழுக்கள் குறித்த சி.சி.டி.வி காட்சிகளை ஆராய்ந்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று இரவு (17) நாரஹேன்பிட்டி சுற்றுவட்ட வீதியில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு அருகில் துசித ஹல்லோலுவ பயணித்த ஜீப் வண்டி மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

இதன்போது ஹல்லோலுவாவும் அவரது சட்டத்தரணி தினேஷ் தொடங்கொடவும் வாகனத்தில் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் ஜீப்பை வண்டியை வழிமறித்து, துப்பாக்கிச் சூடு நடத்தி கதவுகளைத் திறக்குமாறு அச்சுறுத்தியுள்ளதாக அவர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

பின்னர் அடையாளம் தெரியாத நபர்கள் தம்மை தாக்கிவிட்டு, தம்மிடம் இருந்த கோப்புக்களை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றதாக ஹல்லோலுவ வழங்கிய வாக்குமூலத்தில் கூறப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தில் சிறு காயங்களுக்கு உள்ளான துசித ஹல்லோலுவ மற்றும் அவரது சட்டத்தரணியும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த விடயம் குறித்து நாரஹேன்பிட்டி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இன்று காலை சம்பவ இடத்திற்கு சென்ற SOCO அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதைக் காண முடிந்தது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் அறிவுறுத்தலின் பேரில் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில், 2017 முதல் 2019 வரை தேசிய லொலத்தர் சபையின் பணிப்பாளராக பணியாற்றிய துசித ஹல்லோலுவ, ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த போது அவருக்கு மக்கள் தொடர்பு பணிப்பாளர் நாயகமாகவும் பணியாற்றினார்.

கடந்த மே 2 ஆம் திகதி ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, வெளிநாட்டில் பணத்தை முதலீடு செய்ததாக அவர் வெளியிட்ட கருத்தால் சர்ச்சை ஏற்பட்டிருந்தது.

அதன்படி, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய துசித ஹல்லோலுவவை அழைத்து வாக்குமூலம் பெற மே 15 அன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நடவடிக்கை எடுத்திருந்தது.

Related posts

அரச ஊழியர்களின் விடுமுறை தொடர்பான அறிவிப்பு!

வருடங்கள் 200 பழமை வாய்ந்த ரயில் பயணச்சீட்டு மாற்றம் அடைகிறது

அரச ஊழியர்களின் சம்பளத்தில் மாற்றம்!