தோப்பூர் பிரதேசத்தில் மொத்தமாக 12 கிராம சேவகர் பிரிவுகள் காணப்படுகின்றன. இப்பிரதேசத்திற்கு சுகாதார வைத்திய அதிகாரி கட்டிடம் ஒன்றை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை தோப்பூர் மக்கள் நீண்ட காலமாக முன்வைத்து வந்தனர்.
பல அரசாங்கங்களின் காலப்பகுதிகளில் இக் கோரிக்கை வைக்கப்பட்டபோதும், அது கனவாகவே இருந்து வந்தது.
தற்போது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில், அந்த நீண்டநாள் கனவு நனவாகும் தருவாயில் உள்ளது.
இதன் ஒரு கட்டமாக, இன்றைய தினம் சுகாதார வைத்திய அதிகாரி கட்டிடத்திற்கான காணியை அடையாளப்படுத்தும் நிகழ்வு இன்று (19) திங்கட்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்வு மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கசாலி அவர்களின் தலைமையில், தோப்பூர் பிரதேச பிரஜா சக்தி தலைவர்கள் மற்றும் பொதுமக்களின் பங்கேற்புடன் இந்நிகழ்வு இடம்பெற்றது.
இதன் போது சுகாதார வைத்திய அதிகாரி கட்டிடத்திற்கான பொருத்தமான காணி உத்தியோகபூர்வமாக அடையாளப்படுத்தப்பட்டது
நிகழ்வில் கருத்து தெரிவித்த பொதுமக்கள், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவர்களின் அரசாங்கத்தின் கீழ் தோப்பூர் பிரதேசத்திற்கு வழங்கப்படும் அபிவிருத்திப் பணிகள் முழுமையான திருப்தியை அளிப்பதாகவும், இவ்வபிவிருத்தி முயற்சிகளுக்கு தங்களின் பூரண ஒத்துழைப்பு தொடர்ந்தும் வழங்கப்படும் என்றும் தெரிவித்தனர்.
அதேவேளை, பிரஜா சக்தி தவிசாளர்கள் உரையாற்றும் போது, தோப்பூர் மண்ணுக்காக கரிசனையுடன் செயற்பட்டு வரும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா, பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன மற்றும் தோப்பூர் அமைப்பாளர் திலீப நந்துன் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்தனர்.
இந்த நிகழ்வில் மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கஸ்ஸாலி, தோப்பூர் பிரதேச பிரஜா சக்தி தவிசாளர், 59 ஜின்னா நகர் பிரஜா சக்தி தவிசாளர் உள்ளிட்ட பலர் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.
-மூதூர் நிருபர் முஹம்மது ஜிப்ரான்
