மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஜாயா நகர் பசார் பள்ளி வீதி, கடந்த கால அரசாங்கத்தின் காலப்பகுதியில் புனர்நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், இடைநிறுத்தப்பட்டு கைவிடப்பட்டிருந்தது.
இதன் காரணமாக, சுமார் 1500 மீற்றர் நீளமான இவ்வீதி முற்றாக குன்றும் குழியுமாக மிக மோசமான நிலையில் காணப்பட்டு வந்தது.
இவ்வீதி, அப்பகுதியின் மிக முக்கியமான பிரதான வீதியாக இருந்து வருவதுடன், அதிகளவில் பாடசாலை மாணவர்கள், அரச உத்தியோகத்தர்கள், வியாபாரிகள் உள்ளிட்ட பொதுமக்கள் தினசரி பயணம் செய்யும் முக்கிய பாதையாகவும் விளங்குகிறது.
வீதியின் மோசமான நிலை காரணமாக, பொதுமக்கள் கடுமையான அசௌகரியங்களுக்கு உள்ளாகி வந்ததுடன், பல்வேறு குற்றச்சாட்டுகளையும் தொடர்ந்து முன்வைத்து வந்தனர்.
இந்நிலையில், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான திரு. அருண் ஹேமந்திரா மற்றும் திரு. ரொஷான் அக்மீமன ஆகியோரின் ஒப்புதலுடன், மூதூர் தேசிய மக்கள் கட்சி அமைப்பாளர் திரு. சப்ரான் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, குறுகிய காலத்திற்குள் சாலை அபிவிருத்தி அதிகார சபை நிதி ஒதுக்கீட்டின் கீழ், இவ்வீதியை தேசிய மக்கள் கட்சி அரசாங்கம் புனர்நிர்மாணம் செய்ய தீர்மானித்துள்ளது.
இந்த புனரமைப்பு தொடர்பான நிகழ்வில், தேசிய மக்கள் கட்சி அமைப்பாளர் திரு. சப்ரான், ஜாயா வட்டார பிரஜா சக்தி தலைவர் திரு. அஸ்மி உள்ளிட்டோர் கலந்துகொண்டதுடன், அப்பகுதி மக்களின் அயராத முயற்சியும் தொடர்ச்சியான கோரிக்கைகளுமே இவ்வீதியை புனர்நிர்மாணப் பணிக்குள் கொண்டு வர முக்கிய காரணமாக அமைந்ததாக தெரிவிக்கப்பட்டது.
மூதூர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு தற்போது தீர்வு கிடைக்கத் தொடங்கியுள்ளது.
-மூதூர் நிருபர் முஹம்மது ஜிப்ரான்
