கம்போடியாவுடனான எல்லையில் உள்ள தாய்லாந்தின் எட்டு மாவட்டங்களில் இராணுவச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சாந்தாபுரி மற்றும் த்ராட் மாவட்டங்களின் எல்லைப் பாதுகாப்புத் தளபதி அபிச்சார்ட் சப்பிரசேர்ட், இந்த முடிவு கம்போடியாவின் ஆயுதமேந்திய தாக்குதல்களைத் தொடர்ந்து எடுக்கப்பட்டதாக உறுதிப்படுத்தியுள்ளார்.
நீண்டகால எல்லைப் பிரச்சினை, நேற்று (24) போர் விமானங்கள், பீரங்கிகள், தாங்கிகள் மற்றும் தரைப்படைகளை உள்ளடக்கிய கடுமையான மோதலாக வெடித்தது.
இதில் 15 பேர் வரை, பெரும்பாலும் பொதுமக்கள், உயிரிழந்துள்ளனர். இந்த மோதல்கள் போராக உருவாகக்கூடும் என்று தாய்லாந்தின் தற்காலிக பிரதமர் பும்தம் வெச்சயாச்சை எச்சரித்துள்ளார்.
இதற்கிடையில், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் இந்த மோதல் குறித்து அவசரக் கூட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளது.
இந்தச் சூழலில், தாய்லாந்து ஜூலை 25 மாலை முதல் எட்டு எல்லை மாவட்டங்களில் இராணுவச் சட்டத்தை அமுல்படுத்தியுள்ளது. மேலும், எல்லைப் பகுதிகளில் இருந்து 130,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாய்லாந்தின் இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம், கம்போடிய எல்லையில் உள்ள ஆறு தேசிய பூங்காக்களை மூட உத்தரவிட்டுள்ளது. இதனால் அப்பகுதிகளில் பொதுமக்கள் நுழைவது தடை செய்யப்பட்டுள்ளது.